தொழில் போட்டி: அசாம் புரோக்கரை கொலை செய்த சட்டீஸ்கர் வாலிபர் கைது
தொழில் போட்டியால், அசாம் மாநில புரோக்கரை அடித்துக் கொலை செய்த வழக்கில், சட்டீஸ்கரை சேர்ந்த வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அடுத்த கே.புதுப்பாளையம், வெள்ளை பிள்ளையார் தோட்டத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் பாலகிருஷ்ணனுக்கு சொந்தமான வயலில்,கடந்த 7ம் தேதி, 30 வயது மதிக்கத்தக்க, ஆண் சடலம் காணப்பட்டது. இது குறித்து, பரமத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், இறந்து கிடந்தவர் கோழிப்பண்ணைக்கு வேலையாட்களை அழைத்து வரும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சிம்பு ஜாபர் (20) என்ற புரோக்கர் என்று தெரிய வந்தது. இறந்துபோன சிம்பு ஜாபருக்கு சொந்தமான பைக்கில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர், சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ரஜ்மன் என்பதும், அவரது அக்காவின் கணவர் சாமுலு ராமுக்கும் (20), சிம்பு ஜாபருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததும் தெரியவந்தது.
அதனால் சிம்பு ஜாபரை இருவரும் சேர்ந்து மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து பைக், கொலை செய்ய பயன்படுத்திய மண் வெட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சாமுலு ராம் தனது சொந்த மாநிலமான சட்டீஸ்கருக்கு தப்பி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் சென்ற பரமத்தி போலீசார், சாமுலு ராமை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். கொலை வழக்கில் வேகமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த, பரமத்தி இன்ஸ்பெக்டர் முருகேசன், எஸ்.ஐ சகாயராஜ் தலைமையிலான தனிப்படையினரை எஸ்.பி. சரோஜ் குமார் தாக்கூர் பாராட்டினார்.