பரமத்திவேலூர்: அரசு நடுநிலைப்பள்ளியில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்
தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள், அரசு நடுநிலைப்பள்ளியை நாடி வருவதால், இந்த ஆண்டில் மட்டும் 170 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்
பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர், வெங்கமேடு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் மட்டும் புதிதாக 170 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். கடந்த 2011-ம் கல்வி ஆண்டில் இந்த பள்ளியில் 168 மாணவர்கள் மட்டுமே படித்தனர். 6 ஆசிரியர்கள் பணிபுரிந்தார். தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 510 ஆகவும், ஆசிரியர்களின் எண்ணிக்கை 13 ஆகவும் அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இப்பள்ளியில் 30 பேர் 8-ம் வகுப்பை முடித்து விட்டு சென்றனர். பள்ளியில் பல்வேறு வகுப்புகளில் 107 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர். நடப்பு, 2021-2022-ம் கல்வி ஆண்டில் 49 மாணவர்கள் 8-ம் வகுப்பை முடித்து வெளியே சென்றனர். இந்த நிலையில் வேறு அரசு பள்ளிகளில் இருந்து 15 மாணவர்கள் வெங்கமேடு பள்ளியில் சேர்ந்தனர். இது தவிர தனியார் பள்ளிகளில் இருந்து வந்து, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 155 மாணவர்கள் வெங்கமேடு பள்ளியில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்த கல்வி ஆண்டில் புதிதாக 170 மாணவ- மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியை மாலதி கூறுயதாவது: வெங்கமேடு அரசு நடுநிலைப்பள்ளியில், அனைத்து ஆசிரியர்களும் முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்பிக்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக சிறப்பான கல்வி வழங்கி வருகிறோம். இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் எங்கள் பள்ளியை நாடி வந்து சேர்க்கை பெறுகின்றனர். பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று கூறினார்.