பிலிக்கல்பாளையம் ஏலச்சந்தையில் 50 ஆயிரம் கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்
ப.வேலூர் அருகே, பிலிக்கல்பாளையம் வெல்லச்சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனையில் 50 ஆயிரம் கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுக்காவில் உள்ள பாண்டமங்கலம், செங்கப்பள்ளி, பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள்தோட்டங்களில் கரும்பு சாகுபடி வருகின்றனர். வயல்களில் விளையும், கரும்பை வெல்ல ஆலை உரிமையாளர்கள் கொள்முதல் செய்து, தங்களது ஆலைகளில் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.
இப்பகுதியில் தயாரிக்கப்படும் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரையை விற்பனை செய்வதற்காக, பிலிக்கல்பாளையயத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வெல்ல ஏலச்சந்தை நடைபெறுகிறது. ஆலை உரிமையாளர்கள் தயாரிக்கும் வெல்லத்தை, 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி ஏலச் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலத்தில் கொள்முதல் செய்து எடுத்துச்செல்வார்கள்.
இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வெல்லங்களில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதையொட்டி, நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையிலான அதிகாரிகள் முருகன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் செல்வகுமார் உள்ளிட்டோர் பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏல சந்தையில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட, 1 லட்சத்து 42 ஆயிரத்து 740 கிலோ உருண்டை, அச்சு வெல்லங்களை சோதனை செய்தனர். சோதனையில் ரசயான கலப்புள்ள செயற்கை நிறம் மற்றும் அஸ்கா சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்பட்ட உருண்டை மற்றும் அச்சு வெல்லங்கள் சந்தேகத்தின்பேரில் 50 ஆயிரத்து 640 கிலோ பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் டாக்டர் அருண் கூறுகையில், பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம், நாட்டு சர்க்கரை விற்பனையாளர் சந்தையில் உள்ள 10 வெல்லமண்டி உரிமையாளர்களுக்கு, வெல்லத்தில் கலப்படம் குறித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட வெல்லங்களில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டால், உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். உருண்டை வெல்லம், அச்சுவெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரையில் அஸ்கா சர்க்கரை மற்றும் செயற்கை வண்ணங்கள் கலந்தால், உணவு மாதிரி எடுக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.