எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏற்பட்ட தீ விபத்தால் 3 டூ வீலர்கள் எரிந்து சேதம்
கந்தம்பாளையம் அருகே எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீப்பிடித்ததால், 3 டூவீலர்கள் தீயில் எரிந்து சேதமானது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா, கந்தம்பாளையம் அருகே வசந்தபுரத்தில் தேசிமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கி அருகில் உள்ள வீட்டின் மேல் மாடியில் வசிப்பவர்கள், தங்களது வாகனங்கள் வங்கியின் அருகே நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்று ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு மொபட், ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகியவை வங்கி ஓரம் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ஜ் போடப்பட்டிருந்தது.
நீண்ட நேரம் சார்ஜ் போடப்பட்டதால் அதில் மின்கசிவு ஏற்பட்டு, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தீ அருகில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களுக்கும் பரவியது. இதையடுத்து 3 டூ வீலர்களும் தீப்பிடித்து எரிந்து அப்பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. இந்த நிலையில் வங்கியில் இருந்த அபாய சங்கு ஒலித்தது. இதைக்கேட்டதும் ஏராளமானவர்கள் அங்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் 3 டூ வீலர்களும் முற்றிலும் எரிந்த சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து கந்தம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.