ஜேடர்பாளையம் தடுப்பணை வெள்ளத்தில் சிக்கிய 19 பேர் மீட்பு
ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் ஆற்றில் குளிக்கும்போது, வெள்ளத்தில் சிக்கி தவித்த 19 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
தீபாவளி விடுமுறை என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் பரமத்தி வேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையம் தடுப்பணைக்கு வந்தனர். அங்கு அவர்கள் காவிரி ஆற்றில் குளித்தனர். சில சுற்றுலாப் பயணிகள் தடுப்பணையின் நடுப்பகுதிக்கு சென்று குளித்தனர். அப்போது திடீரென ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் தடுப்பணையின் நடுப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து மீண்டு கரைக்கு வர முடியாமல் சிக்கி தவித்தனர். மற்ற சுற்றுலா பயணிகளும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க முயற்சித்தனர். ஆற்றில் வெள்ளம் அதிகமாக சென்றதால் அவர்களால் மீட்க இயலவில்லை.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆற்றுக்குள் சென்று கயிறு கட்டியும், பரிசல்கள் மூலமாகவும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போராட்டத்திற்குப் பிறகு கரூரைச் சேர்ந்த 6 பேர், புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 8 பேர், ஈரோட்டைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
நாமக்கல் நிலைய தீயணைப்பு அலுவலர் ராஜேஷ்வரன், திருச்செங்கோடு நிலைய அலுவலர் நல்லதுரை மற்றும் தீயணைப்பு படையினர் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பொதுமக்களிடம், தற்போது பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், மழை வெள்ளத்தால் ஆறு, ஏரி குளங்களில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே வெள்ளப்பெருக்கு இருக்கும் இடங்களில் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.