அரசு பணத்தில் முதல்வர் தேர்தல் பிரச்சாரம்: கொமதேக ஈஸ்வரன்
அரசு பணத்தில் முதல்வர் பிரச்சாரம் செய்து வருகிறார் - கொமதேக ஈஸ்வரன் குற்றச்சாட்டு;
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மணியனூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மேட்டூரில் உபரியாகும் நீரை திருமணி முத்தாறில் திருப்பிவிடக்கோரி நடைபயண பேரணி நடைபெற்றது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடைப்பயணம் மேற்கொண்டனர். நடைப்பயணத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சுமார் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும், அரசு நிதியை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது வருவது கண்டிக்கத்தக்கது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகவும், இதனை தடுக்க உடனடியாக தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் தேர்தல் பிரச்சாரத்திற்காக செல்லும்போது நாள் ஒன்றுக்கு 15 கோடி வரை செலவழிக்கப்படுகிறது. இதில் 5 கோடி ரூபாய் அரசு நிதியில் இருந்தும் 10 கோடி ரூபாய் வரை அவரது அதிமுகவின் சொந்த நிதியிலிருந்து செலவழிக்கப்படுகிறது. இதனை தேர்தல் கமிஷன் கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரியதாக உள்ளது. பல ஆண்டு கோரிக்கையான காவேரி ஆறு திருமணிமுத்தாறு திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.
உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க கூடாது என போராடக்கூடிய விவசாயிகள் அரசியல் செய்வதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அபாண்டமான பழியை கூறுகின்றார்.
முதலமைச்சர், அமைச்சர்கள் பிரச்சாரம் செய்வது ஆட்சியா ? அரசியலா ? என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும், போராடும் விவசாயிகளை கொச்சப்படுத்த வேண்டாம். விவசாயிகளை கொச்சப்படுத்துவதை பாஜகவிடமிருந்து அதிமுகவினர் கற்றுக்கொண்டு விட்டீர்களா ? என அவர் கேள்வி எழுப்பினார். மேலும் காவிரி - திருமணிமுத்தாறு திட்டம் நிறைவேற்றாவிட்டால் திமுக ஆட்சியில் 100 சதவிகிதம் உறுதியாக நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்தார்.