மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப பலி

Update: 2021-01-11 05:30 GMT

பரமத்திவேலூர் அருகே மின்சாரம் தாக்கியதில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்ய வந்த கூலித்தொழிலாளி பலியானார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் தண்ணீர்பந்தல்மேடு பகுதியில் பழனிச்சாமி என்பவரது தோட்டம் உள்ளது. இதில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்வதற்காக சம்பவத்தன்று காலை ராசிபுரத்தில் இருந்து 14 கூலித்தொழிலாளர்கள் வந்து கிழங்குகளை பிடுங்கி லாரியில் அடுக்கி வைத்து விட்டு மாலை 6 மணி அளவில் மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், ராசிபுரம் அருகிலுள்ள ஒடுவன்குறிச்சியை சேர்ந்த விக்னேஸ்வரன்(31) என்ற கூலித்தொழிலாளி நீச்சல் தெரியாததால் கிணற்றின் அருகிலிருந்த தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக மின் மோட்டாரை இயக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் விக்னேஸ்வரன் தூக்கி வீசப்பட்டார். இதை கண்ட உடன் வந்திருந்த கூலித் தொழிலாளிகள் விக்னேஸ்வரனை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் விக்னேஸ்வரனை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

இதையடுத்து மருத்துவமனை தகவல் அடிப்படையில் வந்த போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் உள்ள உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, விக்னேஸ்வரன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News