பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் : அமைச்சர் தகவல்
பள்ளிளிபாளயைம், குமாரபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகளுக்காக பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.;
தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நாமக்கல் வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதி சாயப்பட்டறை உரிமையாளர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பேசினார்.
மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏக்கம் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, டிஆர்ஓ துர்காமூர்த்தி, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்ட முடிவில் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுரைப்படி தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் மரங்களை நட்டு பராமரிப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
இன்னும் 3 ஆண்டுகளில் வெளிநாட்டு மரங்களை தடை செய்து, மனிதர்களுக்கு மிகுந்த பலன் தரக்கூடிய வேப்பமரம், அரச மரம், பூவரசு போன்ற நாட்டு மரங்களை வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் நட்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் வெளியாகும் கழிவுநீரை எப்படி வெளியேற்றுவது என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். சாயப்பட்டறை சங்கத்தினர் 3 திட்டங்களை அளித்துள்ளனர்.
இது குறித்து தொழில்நுடப்ப வல்லுனர்களின் கருத்தைப்பெற்று மத்திய அரசின் நிதி மற்றும் மாநில அரசின் உதவியுடன் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் 90 சதவீத கழிவுநீரை சுத்திகரித்து மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியும். சுமார் 10 சதவீதம் எஞ்சிய கழிவுகளை எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்த கழிவுக்கான தீர்வு குறித்து இந்திய அளவில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
குறிப்பாக ஈரோடு, திருப்பூர், பள்ளிபாளையம் பகுதிகளில் மட்டும் 2 லட்சம் டன் சாயக்கழிவுகள் தீர்வு காண முடியாமல் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் 9 லட்சம் டன் கழிவுகள் இருப்பில் உள்ளன.
இதை எப்படி சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் அகற்றுவது என்று ஐஐடி போன்ற நிறுவனங்களின் நிபுணர்களைக் கொண்ட குழு அமைத்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளை பச்சை அட்டவணையில் இருந்து வெள்ளை அட்டவனைக்கு மாற்றக்கோரி உள்ளனர். இது மத்திய அரசு சம்மந்தப்பட்டது. இப்போது இதில் பிரச்சினை எதுவும் இல்லை. கோழிப் பண்ணைகள் அமைந்துள்ள பகுதிகளில் ஈக்கள் தொல்லை, துர்நாற்றம் போன்றவற்றை தடுத்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து ஆராய குழு அமைப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில் 8 ஆண்டுகளில் ஐந்தரை கோடி மரக்கன்றுகளை நடுவதற்காக ரூ.900 கோடிசெலவு செய்துள்ளனர். ஆனால் அவற்றில் 5 லட்சம் மரக்கன்றுகளைக் கூட பராமரிக்காமல் விட்டுவிட்டனர். பெயரளவில் நடைபெற்ற இந்த திட்டம் கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
பின்னர் நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சியை அமைச்சர் மெய்யாநாதன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நாமக்கல், சேந்தமங்கலம் ரோட்டில் நகராட்சியின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அவர் பார்வையிட்டார். மேலும், பரமத்திவேலூர் டவுன் பஞ்சாயத்தின் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.