ப.வேலூர் அருகே பாசன வாய்க்காலில் உடைப்பு! விவசாய தோட்டங்கள் வெள்ளம் புகுந்து பாதிப்பு
பரமத்திவேலூர் அருகே பாசன வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட, வெள்ள நீர் விவசாய தோட்டங்களில் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ப.வேலூர் அருகே பாசன வாய்க்காலில் உடைப்பு விவசாய தோட்டங்கள் வெள்ளம் புகுந்து பாதிப்பு
நாமக்கல்,
பரமத்திவேலூர் அருகே பாசன வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட, வெள்ள நீர் விவசாய தோட்டங்களில் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உற்பத்தியாகும் திருமுணிமுத்தாறு நாமக்கல் மாவட்டம் வழியாக பாய்ந்தோடுகிறது. இந்த ஆறு பரமத்தி வேலூர் அருகே நன்செய் இடையாறு என்ற இடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வினாடிக்கு 6,000 கன அடி வீதம் ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில் திருமணிமுத்தாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம் பரமத்தி வேலூர் அருகே இடும்பன்குளம் எனும் இடத்தில் கொமாரபாளையம் பாசன வாய்க்காலை கடந்து செல்கிறது. திருமணி முத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, பாசன வாய்க்காலில் கலந்ததால், வாய்க்காலிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளம் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை, வெற்றிலை மற்றும் கோரை தோட்டங்களில் புகுந்து குளம்போல் தேங்கியுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கியுள்ளதால், விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை, வெற்றிலை, கோரை பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் கவலையடைந்துள்ளனர். இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க துணைத் தலைவர் ஓ.பி.குப்புதுரை கூறியதாவது:
திருமணிமுத்தாற்றில் பல ஆண்டுகளுக்குப் பின் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 6,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆற்று வெள்ளம் கொமாரபாளையம் வாய்க்காலில் கலந்ததால் வாய்க்காலிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் குப்புச்சிபாளையம் காமாட்சி நகர் எனும் இடத்தில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த பொதுப்பணித்துறையினர் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்து வருகின்றனர். வாய்க்காலில் செல்லும் வெள்ளம் வாழை, வெற்றிலை, கோரை சாகுபடி செய்துள்ள விளைநிலங்களில் புகுந்து குளம்போல் தேங்கியுள்ளது. தண்ணீர் வடிந்து செல்ல வழியில்லை. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் வாழை, வெற்றிலை, கோரை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சேதத்தை மாவட்ட நிர்வாகம் கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.