ராசிபுரம் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!
ராசிபுரம் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
ராசிபுரம்:
ராசிபுரம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், மாசி மகா சிவராத்திரி விழா கடந்த வாரம் தொடங்கியது. இதையொட்டி சுவாமி ஊஞ்சல் ஆடுதல், பூப்பந்தல், பூமாலை அலங்கரிப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜை செய்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று அதிகாலை தீக்குண்டம் பற்ற வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து பூங்கரகம், தீச்சட்டி ஏந்தி நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அருகே இருந்து புறப்பட்டு பம்பை, மேள தாளங்களுடன் ராசிபுரம் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின் மலர் அலங்காரத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கோனேரிப்பட்டி திரவுபதி அம்மன் கோவில், நாமகிரிப்பேட்டை வீரபத்திர சுவாகி கோவிலில் தீமிதி விழா நடந்தது.