விளையாட்டு மைதானம் அமைக்க இளைஞர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள் கோரிக்கை

குமாரபாளையத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2024-09-26 11:30 GMT

முருகேசன், விளையாட்டு ஆர்வலர், குமாரபாளையம்.

குமாரபாளையத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விளையாட்டு ஆர்வலர் முருகேசன் கூறுகையில், குமாரபாளையத்தில் அதிக அளவிலான அரசு மற்றும் தனியார் சார்பில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் , 15க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

மேலும் விசைத்தறி, கைத்தறி கூடங்கள், சாயப்பட்டறை , நூற்பாலைகள், தானியங்கி தறி கூடங்கள், உயர்தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் பல்லாயிரம் இளைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் பூப்பந்தாட்டம், வாலிபால், கபடி, கிரிக்கெட், உள்ளிட்ட பல்வேறு தடகள விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்களாக உள்ளனர். இவர்களுக்கு விளையாடுவதற்கு மைதானம் கிடையாது. வயல் வெளியில், சாலையில் விளையாடி வருகின்றனர். சேலம், ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்கு சென்று விளையாடி வருகிறார்கள். நாங்களும் அங்கு சென்று பயிற்சி கொடுத்து, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அழைத்து சென்று, போட்டிகளில் பங்கேற்க வைக்கிறோம். இதில் ஏராளமான மாணவ, மாணவியர் மாநில அளவிலான, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று நம் நாட்டிற்கும், நம் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர்.

பல இளைஞர்களின் பொழுது போக்கு என்பதே தினமும் மது குடிப்பது என ஆகிவிட்டது. இவர்கள் தினமும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள குமாரபாளையம் பகுதியில் விளையாட்டு மைதானம் இருந்தால், மேலும் அதிக அளவிலான இளைஞர்கள் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு பல சாதனைகள் புரியவும், மதுப்பழக்கத்திலிருந்து விடுபட ஏதுவாக இருக்கும். இது போன்ற இளைஞர்களை மீட்க ஒரே வழி விளையாட்டுதான். அதற்கு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தினர் இது குறித்து பரிசீலித்து, குமாரபாளையம் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News