குமாரபாளையத்தில் உலக தண்ணீர் நாள் விழா
தண்ணீரின் முக்கியத்துவம் அதனை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துவ தையும் வலியுறுத்த உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது;
குமாரபாளையத்தில் உலக தண்ணீர் தினம் விழா தளிர்விடும் பாரதம் சார்பில் கொண்டாடப்பட்டது
குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் சார்பில் தலைவர் சீனிவாசன் தலைமையில் உலக தண்ணீர் நாள் விழா கொண்டாடப்பட்டது
தளிர்விடும் பாரதம் அமைப்பின் செயலர் பிரபு கூறியதாவது:1993ம் ஆண்டு முதல் மார்ச் 22ல் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நீர் வளத்தை காக்கவும், நீர் வளம் பெருக்கவுமான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக உலக தண்ணீர் தினம் பூமியில் 30 சதவீதம் நிலப்பரப்பு. மீதம் 70 விழுக்காடு நீர்பரப்புதான். ஆனால் இன்று 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை வழங்க, பூமி தன் தன்மையை இழந்து வருகிறது. நாம் அன்றாடம் செய்யும் வேலையின் போது தண்ணீர் சேமிப்புக்கு வழி வகுக்கலாம். உதாரணமாக, பல் துலக்கும் போது குடிநீர் குழாயை அடைத்து விட்டு பல் துலக்கலாம்.
இதன் மூலம் நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீர் சேமிக்க முடியும். தண்ணீர் குழாயை பயன்படுத்திய பின், குழாயை அடைத்து விட வேண்டும். நாம் வழியில் வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் உடனே குழாயை அடைக்க வேண்டும். தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் நிரப்பும் போது, நிரம்பி வழியாத வகையில் தண்ணீரை உரிய நேரத்தில் நிறுத்த வேண்டும். புதியதாக வீடுகட்டும்போது, மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டி, தண்ணீர் சேமிக்க வழி ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் தண்ணீர் தேவையை, தண்ணீர் சிக்கனத்தை மனதில் வைத்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மக்கள் தொகை மற்றும் தொழிற்சாலைகளின் அதிகரிப்பாலும் சரியாக நீர்நிலைகள் பராமரிக்கப்படாததாலும் நீர் மாசுபாடு அதிகமாக இருக்கிறது. அரசாங்கம் இதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் முழுமையான பலன் இன்னும் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். மக்கள் அனைவருக்கும் சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கச் செய்வதை வலியுறுத்தவே ஒரு நாள் உருவாக்கப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐயன் வள்ளுவர், “நீரின்றி அமையாது உலகு” என்றார்.
இன்றளவும் தண்ணீரின் மதிப்பு தங்கம் விலையை விட உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எத்தனையோ கிராமங்களிலும் சரியான குடிநீர் இணைப்பு வசதி இல்லாமல் பலர் இறக்கின்ற கதைகள் எல்லாம் இன்றும் செய்தித்தாள்களில் வந்து கொண்டே தான் இருக்கிறது. தண்ணீரின் முக்கியத்துவத்தையும் அதனை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துவதையும் வலியுறுத்த தான் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.
தண்ணீர் தினம் என்பது சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடப்படும் நிகழ்வாகும். இந்த நாளில் சுத்தமான குடிநீரை பெறுவதில் உள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து, அதனை நிவர்த்தி செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் 783 மில்லியன் மக்கள் இன்னும் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் உள்ளனர். உலகெங்கிலும் உள்ள 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் போதுமான சுகாதார வசதி பெறாமல் உள்ளனர். பலருக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. சிலருக்கு தண்ணீரே கிடைப்பதில்லை! இந்த இரண்டு தேவைகளையும் பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.
1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டு நிகழ்ச்சியில் முதல் நீர் தினம் முன்மொழியப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதி, தண்ணீர் தினம் கொண்டாடப்படும் என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. உலகளாவிய நீர் தொடர்பான பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள்தான் இந்த தண்ணீர் தினம். இந்த நாளில் ஒவ்வொரு சமூகத்திற்கும் சுத்தமான நீர் விநியோகத்தை உறுதி செய்வதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், முதல் தண்ணீர் தினம் கடைபிடிக்கப் பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் மார்ச் மாதம் 22-ஆம் தேதி 2023ல் 2030 -ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உலகை மீண்டும் வளமான பாதையில் கொண்டு வருவதை நோக்கமாக வைத்து ஐக்கிய நாடுகளில் 2023-ல் நீர் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு, தண்ணீர் மற்றும் சுகாதார நெருக்கடியைத் தீர்க்கவும் உலகை ஒன்றிணைக்கவும் நல்லதொரு வாய்ப்பாக அமையும்..இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
உலக தண்ணீர் தினம் குறித்த பேச்சு, கட்டுரை போட்டிகள் வைக்கப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் சரண்யா உள்பட பலர் பங்கேற்றனர்.