விசைத்தறி இயங்க அனுமதி அளிக்க வேண்டும்: நெசவாளர்கள் கோரிக்கை!
வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் விசைத்தறிகளை இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என, பள்ளிபாளையம் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் 30 -ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன கொரோனா முழு ஊரடங்கு காரணமாக, விசைத்தறி தொழிலுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டு தறி பட்டறைகள் இயங்காமல் மூடப்பட்டன. ஒரு மாதத்திற்கு மேலாகியும் விசைத்தறி கூடங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.
இதனால், விசைத்தறி தொழிலில் அடப்பு தறிகூலி நெசவாளர்கள் என சொல்லப்படும் (தறிப்பட்டறையை லீசுக்கு எடுத்து ஓட்டுபவர்கள்) பிரிவைச் சார்ந்த நெசவாளிகள் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நகராட்சி ஆணையாளர் சரவணன் (பொறுப்பு) சந்தித்து, மனு அளித்தனர் .
அந்த மனுவில், தொடர் ஊரடங்கால் அடப்புதறி நெசவாளிகளான நாங்கள் மின்கட்டணம், கட்டிட வாடகை, உள்ளிட்ட பல்வேறு பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். தனிமனித இடைவெளியுடன் தமிழக அரசு விதிக்கும் அனைத்துவிதமான கட்டுப்பாடுகளுடன் இரவு நேரத்தில் மட்டுமாவது விசைத்தறி இயக்கிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.
தறியில் உற்பத்தியாகும் ஜவுளிகள் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் அனுப்பவேண்டிய ரகம் என்பதாலும் இந்த விவகாரத்தில் நகராட்சி ஆணையம் தீர்வு கண்டு பட்டறைகளை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.