கூலி உயர்வு எங்களை கட்டுப்படுத்தாது: அடப்பு தறி சங்கம் தகவல்
குமாரபாளையத்தில் நடைபெற்ற விசைத்தறி கூலி உயர்வு ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது என அடப்பு தறி சங்கம் தெரிவித்துள்ளது;
அடப்பு தறி நடத்தி வரும் குமாரபாளையம் கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய சங்க தலைவர் சங்கமேஸ்வரன்
குமாரபாளையத்தில் நடைபெற்ற விசைத்தறி கூலி உயர்வு ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது என அடப்பு தறி நடத்தி வரும் கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி பிப். 1 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியுள்ளது. விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர் கூலி உயர்வு பேச்சு வார்த்தை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பல கட்டங்களாக தாலுக்கா அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம் என பல இடங்களில் நடைபெற்று வந்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. நேற்று தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல், நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் அடப்பு தறி உரிமையாளர்களுக்கு 15% கூலி உயர்வும், அடப்பு தறி உரிமையாளர்கள் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீத கூலி உயர்வும் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. ஆனால், இது எங்களுக்கு உடன்பாடில்லை என அடப்பு தறி நடத்தி வரும் கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
இது குறித்து சங்க தலைவர் சங்கமேஸ்வரன் கூறியதாவது: குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் இரு நாட்கள் முன்பு நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் 10 சதவீதம் கூலி உயர்வு செய்யலாம் எனவும், அடப்பு தறி சங்கம் சார்பில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு அதே 10 சதவீதம் கூலி உயர்வும் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பிப். 20ல் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று தாலுக்கா அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்பு தறி உரிமையாளர்கள், அனைவரும் கலந்து கொள்ளவில்லை. எங்கள் கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்கத்தினருக்கு அழைப்பு இல்லை. சிலர் மட்டும் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில், கூலி உயர்வு உடன்பாடு ஏற்பட்டு விட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் எங்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. மேலும் இது போன்ற ஒப்பந்தங்கள் முத்திரை தாள்களில் பதிவு செய்வதுதான் வழக்கம். ஆனால் ஒரு அரசியல் கட்சி லெட்டர் பேடில் ஒப்பந்தம் கையொப்பம் பெறப்பட்டு உள்ளது. இதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று அவர் கூறினார்.
இதே கருத்தை கூலிக்கு நெசவு நெய்யும் விசைத்தறியாளர்கள் சங்க செயலர் பூபதி, உள்ளிட்ட பலரும் தெரிவித்தனர்.இது சம்பந்தமாக துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.