குமாரபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
குமாரபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, பக்தர்கள் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை ஒவ்வொரு வீதியிலும் கொலு வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று காவிரி ஆற்றில் கரைப்பார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி குமாரபாளையம் பகுதியில் பல கடைகள் அமைக்கப்பட்டு பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இந்த சிலைகள் விழுப்புரம், அகரம், பண்ருட்டி, மதுராந்தகம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல ஊர்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை மாநிலம் முழுதும் உள்ள சிலை வியாபாரிகள் வாங்கி சென்று, சிலையின் பாகங்களை ஒன்றிணைத்து, வர்ணம் தீட்டி, விற்பனை செய்வது வழக்கம்.
மேலும் சிலைகளின் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, சிலைகளின் விலை தற்போது இரு மடங்காக கூறி வந்தனர். ஐந்து அடி சிலை முன்பு மூவாயிரம் என்றால் தற்போது ஆறாயிரம், எட்டு அடி சிலை ஆறாயிரம் என்றால் தற்போது ஒன்பதாயிரம் என, ஒவ்வொரு அளவு சிலைகளுக்கும் விலை அதிகரித்துள்ளது. இருப்பினும் ஆண்டுதோறும் விநாயகர் கொலு வைப்பவர்கள் எதோ ஒரு சிலை வைத்து வழிபாடு நடத்தாமல் இருக்க முடியுமா? என சிலைகள் வாங்கி சென்றனர்.
நகரின் ஓவ்வொரு பகுதியிலும் விநாயகர் சிலைகள் கொலு வைக்க, ஆன்மீகவாதிகள் சிலைகள் விற்பனை மையத்திலிருந்து நேற்றுமுன்தினம் சரக்கு வாகனம் மூலம் தங்கள் பகுதிகளுக்கு எடுத்து சென்றனர். நேற்று கொலு வைக்கப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது
. ஜெய்ஹிந்த் நகரில் நவசக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. நகரில் 34 சிலைகள் கொலு வைக்கப்பட்டுள்ளன. செப். 20இல் அனைத்து சிலைகளும் காவிரி ஆற்றில் கரைத்து விட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
நேற்று இரவிலும் கொலு வைக்கப்பட்ட சில சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைத்தனர். இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.