குமாரபாளையத்தில் நேற்று நடந்த பல்வேறு க்ரைம் செய்திகள்
குமாரபாளையத்தில் நேற்று 4 விபத்துகள், ஒருவர் உயிரிழப்பு, ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
குமாரபாளையம் க்ரைம் செய்திகள்:
குமாரபாளையம் பாரதி நகரில் வசிப்பவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த திலிப்பார்த்தி, 20. கட்டிட கூலி. இவருடன் இவரது ஊர் நண்பர்கள் சிலர் தங்கியுள்ளனர். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நண்பர்கள் மாத்திரை வாங்கி தந்துள்ளனர். நேற்று காலை 08:00 மணியளவில் நண்பர்கள் பார்த்த போது, பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்ததால், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் ஜி.ஹெச். கொண்டு சென்று டாக்டரிடம் காட்டிய போது, ஏற்கனவே இறந்துவிட்டார் என்று டாக்டர் கூறினார்.
குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் பகுதியில் வசிப்பவர் பிரபு, 39. நேற்றுமுன்தினம் காலை 09:00 மணியளவில் இவரை, இவரது தந்தை பழனி, 55, தனது டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் கல்லூரிக்கு விட வேண்டி, பின்னால் உட்கார வைத்து தான் ஓட்டி வந்தார். கத்தேரி பிரிவு அருகே வந்த போது அங்குள்ள பெட்ரோல் பங்க்கிலிருந்து வெளியே வேகமாக வந்த மினி டெம்போ மோதியதில் பழனி படுகாயமடைந்தார். டெம்போ ஓட்டுனர் அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணனை கைது செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் தேவராசு, 30. இவர் தன் சித்தப்பா பழனிசாமி, 56, உடன் தனது டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில், குமாரபாளையம் அருகே உடல்நிலை சரியில்லாத பழனிசாமியின் உறவினரை பார்க்க நேற்றுமுன்தினம் காலை 08:00 மணியளவில் சென்றனர். உழவர் சந்தை அருகே சென்ற போது, எதிரே வேகமாக வந்த மினி டெம்போ மோதி, பழனிச்சாமி படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக சேலம் ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டுள்ளார். மோதி விட்டு நிற்காமல் சென்ற மினி டெம்போவை குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.
குமாரபாளையம் கே.ஒ.என்.தியேட்டர் பகுதியில் வசிப்பவர் சம்பந்தமூர்த்தி, 55. விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர். திருச்செங்கோடு கைத்தறி ரக ஒதுக்கீடு உதவி இயக்குனர் மற்றும் உதவி அமலாக்க அலுவலர் ஜெயவேல்கணேசன் தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது சம்பந்தமூர்த்தி, கைத்தறி ரகத்தை விசைத்தறியில் போட்டு, ஜவுளி உற்பத்தி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் சம்பந்தமூர்த்தியை ஒப்படைக்க, குமாரபாளையம் போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த 4 வழக்குகள் குறித்து எஸ்.ஐ. மலர்விழி விசாரணை செய்து வருகிறார்.
குமாரபாளையம் அருகே புள்ளாக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் தமிழரசன், 20. இவரது பல்சர் பைக்கில் நேற்றுமுன்தினம் மாலை 06:00 மணியளவில் தன் நண்பர்கள் கோபாலகிருஷ்ணன், 35, பிரசாந்த், 27, ஆகிய இருவரை உட்கார வைத்துகொண்டு குமாரபாளையம் நோக்கி சென்றார். பாறையூர் என்ற இடத்தில் நிலை தடுமாறி அங்குள்ள பாலத்தின் மீது பைக் மோதியதில் மூவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். மூவரும் குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து எஸ்.ஐ. முருகேசன் விசாரணை செய்து வருகிறார்.
குமாரபாளையம் அருகே கொல்லம்பாளையம் பகுதியில் வசிப்பவர் சண்முகம், 64. இவர் நேற்றுமுன்தினம் இரவு 08:00 மணியளவில் தனது மகனின் பஜாஜ் சி.டி. வாகனத்தில் நண்பர் வீட்டிற்கு சென்று விட்டு, பல்லக்காபாளையம் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது, தனியார் பஸ் மோதியதில் பலத்த காயமடைந்து ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து எஸ்.ஐ. நந்தகுமார் விசாரணை செய்து வருகிறார்.