குமாரபாளையத்தில் சொர்க்கவாசல் திறப்பு வைபவ கோலாகலம்
குமாரபாளையத்தில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் கோலாகலமாக நடந்தது.
சொர்க்கவாசல் திறப்பு வைபவம் வைகுண்ட ஏகாதசி நாளான நேற்று வெகு விமரிசையாக மாநிலம் முழுதும் கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் பகுதியில் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், அதே பகுதியில் ராமர் கோவில், அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், திருவள்ளுவர் நகரில் சவுந்திரராஜ பெருமாள் கோவில், கோட்டைமேடு தாமோதர சுவாமி கோவில்,பவானி கூடுதுறை பெருமாள் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று அதிகாலை 05:00 மணியளவில் நடைபெற்றது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமி எழுந்தருள, பக்தர்கள் பல்லக்கை சுமந்தவாறு சொர்க்கவாசல் வழியாக அழைத்து வந்தனர். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, என விண்ணதிர சரண கோஷமிட்டனர். கோவிலில் சுவாமிகளுக்கும், தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.
பக்தர்களுக்கு பிரசாதம், இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பாண்டுரங்கர் கோவிலில் நேற்று காலை கோவிலுக்கு வந்த பஜனை குழுவினர்களுக்கு வரவேற்பு வழங்கும் நிகழ்வு நடந்தது. ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், புத்தர் தெரு நட விநாயகர் தெரு, கத்தாளபேட்டை பஜனை கோவில், சின்னப்பநாயக்கன்பாளையம் கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் இரவு நேர பஜனை நடந்தது.
அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் சார்பில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் அனைத்து பெருமாள் கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர்.