ஆற்றில் குளிக்க சென்ற இருவர் பலி
பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற தனியார் காகித ஆலை தொழிலாளர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்;
பள்ளிப்பாளையம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற தனியார் காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள தனியார் ஆலையில் ஒப்பந்த தொழிலாளராக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிகரன் மற்றும் சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியை சேர்ந்த கிரிநாத் ஆகிய இருவரும் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் இருவரும் காகித ஆலை அருகில் உள்ள பாப்பம்பாளையம் காவிரி ஆற்று பகுதிக்கு குளிக்க சென்றனர். அப்போது ஆற்றில் ஆழமான பகுதியில் உள்ள சுழலில் இருவரும் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். இதைப் பார்த்த அப்பகுதியினர் உடனடியாக வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இருவரையும் சடலமாக மீட்டு பள்ளிபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து பள்ளிபாளையம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்ந்து இதே பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் அதிக அளவில் ஆற்றில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் காவல்துறையினர்.,பொதுப்பணித் துறையினர் இணைந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.