ஒரே இடத்தில் தேர்தல் பணிமனை அமைக்க தீவிரம் காட்டும் கட்சியினர்
குமாரபாளையத்தில் ஒரே இடத்தில் தேர்தல் பணிமனை அமைக்க அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
குமாரபாளையத்தை தாலுக்காவாக அறிவிக்க நடவடிக்கை எடுத்தது, அரசு கலை அறிவியல் கல்லூரி கொண்டு வந்தது, கூட்டு குடிநீர் திட்டம் அமைத்தது, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இடம் தேர்வு செய்தது, புதிய தாலுக்கா அலுவலகம் கட்ட அனுமதி மற்றும் மற்றும் நிதி ஒதுக்கீடு பெற்றுத் தந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை தங்கமணி செய்து கொடுத்துள்ளார்.
எம்.எல்.ஏ.நிதியில் பல்வேறு சாலைப்பணிகள், வடிகால், குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் செய்து கொடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப். 19ல் வருவதையொட்டி, அ.தி.மு.க. சார்பில் செய்து கொடுத்த நலத்திட்ட பணிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துச்சொல்லி, அ.தி.மு.க.வினர் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தேர்தல் பணிகள் கவனிக்க ஒவ்வொரு அரசியல் கட்சியினர் தேர்தல் பணிமனை அமைப்பது வழக்கம். அதன்படி, சேலம் சாலை போலீஸ் ஸ்டேஷன் அருகில், காலியாக உள்ள தனியார் இடத்தில் தேர்தல் பணிமனை அமைக்க, அ.தி.மு.க.வினர் முயற்சி மேற்கொண்ட நிலையில், தி.மு.க. சார்பில், அதே இடத்தில் தேர்தல் பணிமனை அமைக்க போலீசாரிடம் அனுமதி கேட்டு வருகின்றனர்.
ஒரே இடத்தில் தேர்தல் பணிமனை அமைக்க அனுமதி கேட்டு வரும் நிலையில், இரு தரப்பினரும், அந்த இடத்தில் தங்கள் கட்சி கொடிகளை கட்டியுள்ளனர். போலீசார் நடவடிக்கைக்கு பின், யாருக்கு அந்த இடம் என்பது முடிவாகும் என தெரியவரும். யாருக்கு அந்த இடம் கிடைக்கப்போகிறதோ? என அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.