செல்வமாரியம்மன் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையம் அருகே செல்வமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.;

Update: 2023-09-09 13:00 GMT

குமாரபாளையம் அருகே செல்வமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது

குமாரபாளையம் அருகே செல்வமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை காலனி சக்தி விநாயகர், செல்வமாரியம்மன், மதுரை வீரன், முனியப்பன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் கணபதி யாகத்துடன் துவங்கியது. நேற்று பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து பம்பை, மேள, தாளங்கள் முழங்க, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

மாலையில் யாக சாலை பூஜைகள் துவங்கியது. நான்காம் கால யாக சாலை பூஜைக்கு பின், செப். 11 காலை 09:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். செப். 12 முதல் மண்டல பூஜைகள் நடைபெறவுள்ளன. விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமாய் விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கிராமத்து தெய்வ வழிபாடு குறித்து ஆன்மீக அன்பர்கள் கூறியதாவது: நாட்டுப்புற மக்களால் வழிபடப்பெறும் இத்தெய்வங்கள் நாட்டுப்புறத் தெய்வங்களாகும். இத்தெய்வங்களின் வரலாறு மக்களால் நன்கு அறியப்பட்டவையே. இத்தெய்வங்களின் தோற்றங்களுக்குப் பல வாய்மொழிக் கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  அவ்வாறு வணங்கப் பெறும் தெய்வங்களுள் பெரும்பான்மை பெண் தெய்வங்களே என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பெண் தெய்வங்கள், ஊர்த் தெய்வங்கள், பொதுத் தெய்வங்கள், இனத்தெய்வங்கள், குலதெய்வங்கள், வீட்டுத் தெய்வங்கள், பத்தினித் தெய்வங்கள், காவல் தெய்வங்கள், எல்லைத் தெய்வங்கள் எனப் பல நிலைகளில் வணங்கப்படுகின்றன. இப் பெண் தெய்வங்கள் அம்மன் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படுகின்றனர். இத்தனை பெண் தெய்வங்கள்தான் என்று எண்ணிக்கையில் சொல்ல முடியாத அளவுக்கு பெண் தெய்வங்கள் சமூகத்தில் வழிபடப்பட்டு வருகின்றன.

நாட்டுப்புறத் தெய்வங்கள் பெரும்பாலும், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், நீர்நிலைகளுக்கு அருகில் உறைவதாக நம்பினர். முறையான கோயில் அமைப்போ, சிலை வடிவமோ இல்லாமல், சாதாரணமாக ஒரு கல்லிலோ அல்லது மரத்திலோகூட தெய்வம் உறைவதாக மக்கள் நம்புகின்றனர்.

இத்தெய்வங்களுக்கு விரதமிருந்தும், உயிர்பலி கொடுத்தும் வழிபாடு செய்யப்படுகின்றது. இவை மட்டுமல்லாமல் வேண்டுதல், நேர்த்திக்கடன், தீமிதித்தல், தேர் இழுத்தல் போன்றனவும் வழிபாட்டு நிலையில் அடங்கும்.

நாட்டுப்புறத் தெய்வங்கள் பரவலாக எல்லோராலும் வணங்கப்படுகின்றன. பொதுவாக இத்தெய்வங்கள் குறிப்பிட்ட இனம், சாதி, ஊர் என்றில்லாமல் அனைவராலும் வணங்கப் படுகிறது. அதே போல் ஒரே தெய்வம் குலதெய்வமாகவும், இனத் தெய்வமாகவும், ஊர்த் தெய்வமாகவும் வழிபடப்பட்டு வருகின்றன.

பெரும்பாலும் அருள்வாக்கு கேட்டு தெய்வத்தின் சம்மதத்துடனே திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. பெரும்பாலும் ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்பட்டு வழிபாடுகளும், பூசைகளும், திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

படவிளக்கம் : 

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை காலனி செல்வமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

Tags:    

Similar News