ஜவுளி துணிகள் அரவை நூற்பாலை தீ விபத்து: ரூ.2 கோடி ஜவுளி பஞ்சுகள் எரிந்து சேதம்

குமாரபாளையம் அருகே ஜவுளி துணிகள் அரவை நூற்பாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி பஞ்சுகள் எரிந்து சேதமாயின.;

Update: 2024-08-06 01:13 GMT

குமாரபாளையம் அருகே ஜவுளி துணிகள் அரவை நூற்பாலையில் திடீர் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி பஞ்சுகள் எரிந்து சேதமானது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியில் வையாபுரி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பள்ளிபாளையத்தை சேர்ந்த நடராஜ் என்பவர், திருப்பூர் கோயமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி கழிவுகளை பெற்று வந்து, அவற்றை அரைத்து பஞ்சுகளாக மீண்டும் தயார் செய்து நூற்பாலைகளுக்கு அனுப்பி வைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் பணிகள் முடிவடைந்து ஜவுளி அரவை நூற்பாலையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் நள்ளிரவு திடீரென நூற்பாலைப் பகுதியில் இருந்து புகைமூட்டம் ஏற்பட்டதால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக நடராஜுக்கு தகவல் அளித்தனர். அவர் வந்து பார்த்த பொழுது நூற்பாலைக்குள் இருந்த பஞ்சு குடோனுக்குள் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவர் குமாரபாளையம் தீயணைப்பு குழுவினருக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

பின்னர் வெப்படை, திருச்செங்கோடு உள்ளிட்ட தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதற்குள் தீ கொழுந்து விட்டு எறிந்து கட்டிடம் முழுவதும் சேதமானது. அதனையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் சேதமான ஜவுளிகள், பஞ்சு ஆகியவற்றை அகற்றினர். தீ விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சுகளும் எரிந்து சேதம் ஆகியதாக தெரிகிறது.

Tags:    

Similar News