பெண் படுகொலையை கண்டித்து விவசாய சங்கத்தார் ஆர்பாட்டம்

ஜேடர்பாளையம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி தமிழ்நாடு விவசாய சங்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2023-04-30 15:30 GMT

ஜேடர்பாளையம் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக்கோரி, குமாரபாளையம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

ஜேடர்பாளையம் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக் கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பரமத்தி வேலூர் வட்டம்,ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தைச் சேர்ந்த பட்டதாரி இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகியும் உண்மையான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை.

காவல்துறை குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களின் ஒரு பகுதியினரை மிரட்டி பொய் வழக்கு போடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆகவே இந்த விசாரணை பாரபட்சம் இன்றி நடைபெற சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஏப். 24ல் ஜேடர்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகளுடைய வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசுவதும் அப்பாவி இளைஞர்கள் மீது பொய் வழக்கு போடுவதும், தோட்டங்களில் டிராக்டர்களுக்கு தீ வைத்து பைப் லைன்களை உடைத்து சேதப்படுத்தக்கூடிய நிகழ்வும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விசாரணையை சி.பி சி.ஐ.டி க்கு மாற்றப்பட வேண்டும், உண்மையான குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

காவல்துறை அப்பாவி பொதுமக்களை மிரட்டி பொய் வழக்கு போட்டதை வாபஸ் பெற்று, சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும், வயல்வெளிகளில் பணிபுரியும் விவசாய பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமாரபாளையம், தட்டாங்குட்டை ஊராட்சி, கல்லாக்காட்டுவலசில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் தனேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர்கள் ப.பா. மோகன், கார்த்திகேயன், ஆகியோரும் விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆதிநாராயணன், மாவட்ட செயலாளர் பெருமாள், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் 300  -கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர்.




Tags:    

Similar News