கோடை வெயிலை துவம்சம் செய்த குளு குளு மழை
கோடையில் பெய்து வரும் மழையால் வெயில் பாதிப்பு தெரியாமல் உள்ளது என்று மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.;
கடந்த 2020மற்றும் 2021ம் ஆண்டுகளில் கோடை வெயிலை, கோடை மழை துவம்சம் செய்துவிட்டதை நாம் பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. ஆனால், கோடை மழை அந்த வெயிலை காணாமல் போகச் செய்தது. அக்னி வெயில் கூட கடந்த ஆண்டில் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அந்த அளவுக்கு பரவலாக மழை பெய்து குளிர்வித்தது.
அதே போல இந்த ஆண்டும் சித்திரை பிறந்த அன்றே மழை பெய்தது. அதைத் தொடர்ந்து பகலில் வெயில் வாட்டுவதும், மாலையில் மழை வருவதுமாக இருந்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் முழுவதுமே நல்ல மழை பெய்து வருகிறது. குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் பகலில் கடுமையான வெயில் வீசுகிறது. ஆனால், மாலையில் மழை பெய்து குளிர்வித்து விடுகிறது. தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை இருப்பதாகவும், சில மாவட்டங்களுக்கு கன மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோடையில் பெய்து வரும் மழையால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பகலில் வெயிலும் மாலையில் மழையும் என்று மாறி மாறி வருவதால் உடல் நிலை பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. கோழி, ஆடு,மாடுகளுக்கு கூட பாதிப்புகள் ஏற்படலாம் என்று கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கோடையை சமாளிக்க இப்படி அவ்வப்போது மழை பெய்தாலே போதும் என்று பொது மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். இந்த மழையால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.