'நுங்கு வாங்கலையோ..நுங்கு' கோடை வெயிலுக்கு இதமாக நுங்கு, தர்பூசணி

கோடை வெயிலுக்கு இதமான நுங்கு மற்றும் தர்பூசணி விற்பனை சூடுபிடித்துள்ளது.

Update: 2021-04-23 10:53 GMT

நுங்கு விற்பனை (மாதிரி படம்)

குமாரபாளையம் பகுதிகளில் கோடைக்கு இதமாக நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது.  கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சித்திரை மாதம் தொடங்கியதில் இருந்தே வெயில் கடுமையாக வீசுகிறது. பகல் நேரங்களில் தெருக்களில் மக்கள் நடமாட்டத்தையே காண முடியவில்லை. அந்த அளவுக்கு வெயில் கடுமை காட்டுகிறது. 


அக்னி தொடங்கினால்  இன்னும் வெயிலின் உக்கிரம் அதிகமாகும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக மழை பெய்ததால் மாலை நேரங்களில் குளிர்ச்சியாக இருந்தாலும், பகல் நேர வெயில் கடுமையாகவே இருக்கிறது. குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோர் வெப்பம் தாளாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் நுங்கு, இளநீர், தர்பூசணி, கரும்புச் சாறு போன்ற குளிர்ச்சி தரும் இயற்கை பானங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. குமாரபாளையம் பஸ் நிலையம், பள்ளிபாளையம் பிரிவு ரோடு, பவானி பை பாஸ் பகுதிகளில் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. உச்சி வெயில் நேரத்தில் உடலுக்கு இதமாக நுங்கு அற்புத குளிர்ச்சி அமுதமாகிறது. கோடைக்கு கிடைத்த வரம் தர்பூசணி. கரும்புச் சாறு உடலுக்கு தெம்பு தரும் குளுக்கோஸ் ஆகிறது.  வெயிலின் பாதிப்பில் இருந்து தப்பிக்க நுங்கு, தர்பூசணி, கரும்புச் சாறு போன்றவைகளை வாங்கி சுவைத்து வருகின்றனர். 

Tags:    

Similar News