திருச்செங்கோடு காட்டன் குடோனில் திடீர் தீ விபத்து
திருச்செங்கோடு வேஸ்ட் காட்டன் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி ரோட்டில் ஜோதி தியேட்டர் பின்புறம் சித்தார்த்தா ஓட்டல் அருகில் உள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான வேஸ்ட் காட்டன் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம். தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரமாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி ரோட்டில் ஜோதி தியேட்டர் பின்புறம் சித்தார்த்தா ஓட்டல் அருகில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான வேஸ்ட் காட்டன்குடோன் உள்ளது.
இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த பணியாளர்கள் தரம் பிரிக்க இரண்டு மூட்டைகளையும் வெளியே இழுத்து போட்டு வேலை செய்து கொண்டிருந்தபோது, குடோனுக்குள் திடீரென புகை வந்தது. என்ன என சுதாரிப்பதற்குள் மளமளவென பரவி தீயால் குடோனுக்குள் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.
சம்பவம் குறித்த தகவல் அறிந்த திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் குடோனில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.
எரிந்து போன பொருள்களின் மதிப்பு சுமார் 7 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. நேற்று குடோனில் இருந்த சரக்குகளை அனுப்ப இருந்த நிலையில், முழுமையாக இன்று அனுப்ப நினைத்து இருந்ததாகவும் அதற்குள் தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் சேதம் ஆகிவிட்டதாகவும், குடோன் உரிமையாளர் சக்திவேல் தெரிவித்தார். சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.