பங்குனி உத்திரம்: முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குமாரபாளையம் பகுதியில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது;
குமாரபாளையம் வட்டமலை வேலாயுதசுவாமி கோவிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
குமாரபாளையம் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பங்குனி உத்திரத்தையொட்டி குமாரபாளையம் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வட்டமலை வேலாயுத சுவாமி கோவிலில் காவிரியிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
காவல்நிலையம் அருகில் உள்ள பாலமுருகன் கோவிலில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி அருள்பாலிக்க, காவடி பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இது போல் காளியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், நடன விநாயகர் கோயில், ராஜவிநாயகர் கோயில், அங்காளம்மன் கோயில், காசி விச்வேஸ்வரர் கோயில், மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வர் கோயில், கள்ளிபாளையம் முருகன் கோயில், மருதமலை முருகன் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது