வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி விசாகத்தையொட்டி குமாரபாளையம் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2024-05-23 01:21 GMT

வைகாசி விசாகத்தையொட்டி குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவிலில், முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் முருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன.

அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமிகள் வலம் வந்தனர். அரோகரா என்ற சரண கோஷத்துடன் சுவாமிகளுடன் கோவிலை பக்தர்கள் சுற்றி வலம் வந்தனர். இதே போல் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில்கள், உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில், உடையார் பேட்டை ராஜ விநாயகர் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், கள்ளிபாளையம் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதரித்த நாளாகும். வைகாசித் திங்களில் வரும் விசாக நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், விலங்குகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் நோன்பிருத்து கோவில்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.

புத்த பெருமான் பிறந்ததும் ஞானம் பெற்றதும் இந்த வைகாசி விசாகத்திலேயே ஆகும். இந்நாளிலேயே நம்மாழ்வாரும் பிறந்தார்.

Tags:    

Similar News