பகத்சிங்கிற்கு மரியாதை செலுத்திய மாணவ, மாணவிகள்
குமாரபாளையத்தில் பள்ளி மாணவ, மாணவியர் பகத்சிங்கிற்கு மரியாதை செலுத்தினர்;
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் பகத்சிங் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையத்தில் மாணவ, மாணவியர் பகத்சிங்கிற்கு மரியாதை செலுத்தினர்.
குமாரபாளையம் சத்யாபுரியில் விடுதலைப் போராட்ட தியாகி பகத்சிங் பிறந்ததின விழா விடியல் ஆரம்பம் சார்பில் கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு பேச்சு மற்றும் வினாடி-வினா போட்டிகள் வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியர், தாய், தந்தை சொற்படி நடந்து கொள்வேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் அமைப்பாளர் பிரகாஷ், நிர்வாகிகள் சண்முகம், தீனா, அங்கப்பன், அமுதா,புஷ்பா, உள்பட பலர் பங்கேற்றனர்.
பகத் சிங் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப் பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சி யவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு.
இந்தியாவில் ஆங்கிலேயரது ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்.
பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரிட்டன் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது.
முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப் பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது. பகத் சிங் தூக்கில் இடுவதுற்கு முன் தன் தந்தைக்கு நான் ஏன் கடவுள் மறுப்பு கொண்டவனாக மாறினேன் என்பதை கடிதம் மூலம் தெரிவித்தார். அது பின் நாளில் புத்தகம் ஆக வெளி வந்தது. தமிழில் அப்புத்தகம் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற பெயரில் ப. ஜீவானந்தம் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது.