பொங்கல் சீட்டு சேர்த்து ரூ.50 லட்சம் மோசடி: நகராட்சி தலைவரிடம் பொதுமக்கள் புகார்
குமாரபாளையத்தில் பொங்கல் சீட்டு சேர்த்து 50 லட்சம் பணம் மோசடி செய்தது குறித்து பொதுமக்கள் நகராட்சி தலைவரிடம் புகார் தெரிவித்தனர்.;
குமாரபாளையத்தில் பொங்கல் சீட்டு சேர்த்து 50 லட்சம் பணம் மோசடி செய்தது குறித்து நகராட்சி தலைவரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் விசைத்தறி, கைத்தறி, சாயப்பட்டறைகள் மற்றும் பல ஸ்பின்னிங் மில்களில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பு செய்ய, ஏலச்சீட்டு, வங்கி, அஞ்சல் அலுவலகம் இது போக தீபாவளி பலகார சீட்டு, பொங்கல் பலகார சீட்டு என சேமித்து வருகிறார்கள்.
ஆண்டின் முடிவில், சேமித்த பணம், வட்டி மற்றும் இனிப்புக்கள், எதாவது பாத்திரம் என்பது உள்ளிட்டவைகளை கொடுப்பதுடன் புடவைகளும் சிலர் கொடுப்பது உண்டு. இதற்கு ஆசைப்பட்டு, பல தொழிலாளர்கள் பலகார சீட்டு சேர்ந்து வருகிறார்கள். ஒரு சிலர், சேமித்த பணத்தை, உரியவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். இன்னுல் சில நபர்கள் சேமித்த பணத்துடன் தலைமறைவாகி விடுகின்றனர்.
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்ற இளைஞர், பொங்கல் பலகார சீட்டு என சொல்லி, ஸ்ரீவாரி சிறு சேமிப்பு திட்டம் என்ற பெயரில், சீட்டுக்கு ஆட்கள் பிடித்து, வாரம் வாரம் 50,100,250, 500 என்ற வகையில் வசூல் செய்து, சேமிப்பு அட்டையில் வரவு வைத்து கொடுத்துள்ளார்.
பொங்கல் நெருங்கி வரும் நிலையில், அவரிடம் சேமித்த பணம் கேட்ட போது, தருகிறேன் என்று கூறி, காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஆனால் நேற்றிலிருந்து அவரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் 70க்கும் மேற்பட்ட நபர்கள் குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் வந்தனர். அங்கு நகராட்சி தலைவர் விஜய்கண்ணனிடம் புகார் தெரிவித்து, பணமோசடி செய்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டனர்.
இதுகுறித்து போலீசாரிடம் சொல்லி உரிய நடவடிக்கை எடுக்க கூறலாம் என்று கூறி, அவர்களை சமாதானப்படுத்தி நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் அனுப்பி வைத்தார். இன்று குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மோசடி நபர் பொதுமக்களிடம் சுமார் 50 லட்சம் வரை பணத்தை ஏமாற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது.