கரும்பு அதிக மகசூலுக்கு ரூ.2.5 லட்சம் பரிசு அறிவிப்பு: வேளாண் அதிகாரிகள் ஆய்வு
கரும்பு அதிக மகசூலுக்கு 2.5 லட்சம் பரிசு என தமிழக அரசு அறிவித்ததால், குமாரபாளையம் அருகே கரும்பு தோட்டங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கரும்பு அதிக மகசூலுக்கு 2.5 லட்சம் பரிசு என தமிழக அரசு அறிவித்ததால், குமாரபாளையம் அருகே கரும்பு தோட்டங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒரு ஏக்கர் நிலத்தில் அதிக மகசூல் செய்யும் விவசாயிக்கு முதல் பரிசு 2.5 லட்சம் பரிசு என தமிழக அரசு அறிவித்தது. இதனடிப்படையில் வேளாண் துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்ட வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் நிலையில், குமாரபாளையம் அருகே சீராம்பாளையம் பகுதியில் பழனியப்பன் என்பவரது கரும்பு தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து ஈரோடு வேளாண்மை துறை இணை இயக்குனர் வெங்கடேசன் கூறியதாவது:
விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சிறு தானியம், எண்ணை வித்துக்கள், கரும்பு உள்ளிட்ட 11 பயிர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக அறுவடை பரிசோதனை நடந்து வருகிறது. இதில் முதல் பரிசாக
2.5 லட்சம் ரூபாய், இரண்டாவது பரிசாக 1.5 லட்சம் ரூபாய், மூன்றாவது பரிசாக ஒரு லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான கரும்பு அறுவடை நடைபெறுகிறது. இதில் வேளாண் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒரு ஏக்கர் மகசூல் கணக்கிடப்படுகிறது. பிற மாவட்டங்களில் இந்த அறுவடை நிறைவு பெற்று, அரசின் பரிசீலனைக்கு பின் பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு உதவி இணை இயக்குனர் கலைச்செல்வி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், வேளாண்மை இயக்குனர் பிரதிநிதிகள் சுதா, தனம், துணை வேளாண்மை அலுவலர் மாயஜோதி, வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி, விவசாயிகள் பிரதிநிதி ரகுநாதன், உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனலட்சுமி, உதவி வேளாண்மை அலுவலர்கள் நிஷா, விஷ்ணுபிரியா, பொன்னி சர்க்கரை ஆலை பொது மேலாளர் பாலகிருஷ்ணன், உள்பட பலர் பங்கேற்றனர்.