நூதன முறையில் ஆய்வு செய்து டாஸ்மாக் ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு

குமாரபாளையத்தில் போலீசார் நூதன முறையில் ஆய்வு செய்து டாஸ்மாக் ஊழியர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்;

Update: 2023-06-16 14:45 GMT

குமாரபாளையத்தில் ட்ரோன் கேமரா மூலம் போலீசார் நூதன முறையில் கள்ள மது விற்பனை குறித்து ஆய்வு செய்தனர்.

குமாரபாளையத்தில் போலீசார் நூதன முறையில் ஆய்வு செய்து டாஸ்மாக் நிர்வாகிகள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

குமாரபாளையத்தில் கள்ள மது விற்பனை அதிகம் நடப்பதாக பல புகார்கள் வந்ததையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தீவிர ஆய்வு செய்து பலரை கைது செய்தார். டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், டாஸ்மாக் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதித்தார். இருப்பினும் விசைத்தறி தொழிலாளர்களை குறி வைத்து, டாஸ்மாக் மது பான வகைகள் டாஸ்மாக் நிர்வாகிகளால் விற்கப்படுகிறது என ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் ஒரு கட்டமாக நேற்று காலை 06: மணியளவில் ட்ரோன் கேமரா மூலம், குமாரபாளையம் நகரில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் திடீர் ஆய்வு செய்தனர். பல்லக்காபாளையம் டாஸ்மாக் கடை அருகே பார் மற்றும் டாஸ்மாக் நிர்வாகிகளால் மது அதிக விலைக்கு விற்கப்பட்டதை கையும், களவுமாக கண்டுபிடித்து, 49 பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

இதில் வளையக்காரனூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ், 44 என்பவரை கைது செய்தனர். டாஸ்மாக் கடை எண்: 6015ன் மேற்பார்வையாளர், அம்மன் நகரை சேர்ந்த சுப்புராஜா, 47, அதே கடை விற்பனையாளரான கத்தேரி, சாமியம்பாளை யத்தை சேர்ந்த செல்வராஜ், 43, என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் தலைமறைவான நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் தவமணி கூறியது போல், பார் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.




Tags:    

Similar News