ஏரியில் கழிவு நீர் கலப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
பள்ளிபாளையம் அருகே ஏரி நீரில் கழிவு நீர் கலப்பதற்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.;
பள்ளிபாளையம் அருகே ஏரி நீரில் சாய நீர் கலப்பதாக வந்த புகாரையடுத்து, போலீசார், மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் உள்பட பலர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
பள்ளிபாளையம் அருகே ஏரி நீரில் கழிவு நீர் கலக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது.
சாயத் தொழிற்சாலைகளின் கழிவுநீர் ஏரி நீரில் கலந்து மாசு ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் போராட முயன்றதை அடுத்து முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தெளிவான முடிவு எட்டப்படாததால் இரண்டு நாட்களுக்குள் மீண்டும் போராட்டம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிபாளையம் அடுத்துள்ள மோடமங்கலம் கிராமத்தில் பொய்யேரி ஏரி அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பொய்யேரி ஏரி அருகில் செயல்படும் தனியார் ஸ்பின்னிங் மில் மற்றும் டெக்ஸ்டைல் நிறுவனங்கள் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு உள்ளததாகவும், மேலும் அதில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஏரியில் கலந்து விடப்படுவதால், ஏரி நீர் மாசுபட்டு மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முறையாக விசாரிக்காததால், வாழத் தகுதியற்ற பூமியாக பொய்யேரி பகுதி உள்ளது எனக்கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சான்றோர் மக்கள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் பொய்யேரி ஏரி பகுதியில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர் .
இதனை அடுத்து ஏரி பகுதிக்கு விரைந்த வெப்படை எஸ்.ஐ. மலர்விழி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மணிவண்ணன், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் போராட்ட குழுவினருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .இதனை அடுத்து மோடமங்கலம் அக்ரஹாரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் , அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் அடங்கிய போராட்டக் குழுவினர் என முத்தரப்பு பேச்சுவார்த்தையில்
இரண்டு தினங்களுக்குள் உரிய தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்வதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர். அரசு அதிகாரிகள் உறுதி அளித்தபடி முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படாத பட்சத்தில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். இதன் காரணமாக மோடமங்கலம் கிராமப்புற பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.