குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீர்

குமாரபாளையத்தில் சாயக்கழிவு நீர் காவிரி ஆற்றில் கலந்து வருவதை மாசுக்கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-07 13:00 GMT

குமாரபாளையத்தில் சாயக்கழிவு நீர் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. இடம் காவேரி நகர் 

குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 200க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன. இவைகளில் விசைத்தறி மற்றும் கைத்தறி ரகங்களுக்கு தேவையான நூல்களுக்கு சாயம் போடப்படுகிறது. இவைகளில் அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள், அனுமதி பெறாத சாயப்பட்டறைகள் உள்ளன.

அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள் உள்ளிட்ட அனைத்தும் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்துதான் வெளியேற்ற வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் சில சாயப்பட்டறைகள் சுத்திகரிப்பு செய்யாமல் சாயக்கழிவு நீரை அப்படியே காவிரி ஆற்றில் கலக்க விடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து, பொக்லைன் உதவியுடன் இடித்து வருகின்றனர். மேலும் மின் இணைப்பும் துண்டித்து வருகின்றனர்.

ஆனாலும் இப்படிப்பட்ட சாயப்பட்டறைகளில் மாற்று வழியில் உள்ளே நுழைந்து, ஜெனரேட்டர் மூலம் சாயம் போடும் பணியை இரவில் செய்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதுதான்.

சில நாட்கள் முன்பு குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவுநீர் செல்லும் கோம்பு பள்ளத்தில் நீல நிறமாக சாயக்கழிவு நீர் சென்று, காவிரியில் கலந்தது. குடிநீரை விஷமாக்கும் இது போன்ற நிறுவனங்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் நேற்று காவேரி நகர் பகுதியில் காவிரி ஆற்றில் அப்பகுதி சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர், காவிரி ஆற்றில் கலந்தது. இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், தினமும் இதுபோல் மாலை மற்றும் இரவில் சாயப்பட்டறையினர் கழிவுநீரை வெளியேற்றுகின்றனர். இதனால்,  இப்பகுதியில் வசிப்பவர்கள் இந்த துர்நாற்றம் தாங்க முடியாத நிலையில் உள்ளனர்.  நகராட்சிக்கு குடிநீர் எடுக்கப்படும் இடம் அருகே இந்த சாயக்கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்பதால், மாசுக்கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறினர்

Tags:    

Similar News