கலெக்டர் சொல்றதை கேளுங்க! கடன் நிறுவனங்களுக்கு போலீஸ் அட்வைஸ்...

ஊரடங்கு முடியும் வரை கலெக்டர் உத்தரவின்படி கடன் நிறுவனங்கள் பொதுமக்களிடம் கடனை வசூலிக்க கூடாது என, பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Update: 2021-06-12 10:25 GMT

பள்ளிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தமூர்த்தி, உதவி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலையில், நிதி நிறுவனங்கள் ,மகளிர் சுய உதவிக்குழு முகவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  மெகராஜ், அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வேலையின்றி பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டிலேயே உள்ளனர்.

எனவே, அவர்களிடம் மகளிர் சுய உதவிக் குழுக்கள், தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்டவை, பொதுமக்களிடம் கடனை கட்டச் சொல்லி நிர்பந்தம் செய்யக்கூடாது. அவ்வாறு மீறும் கடன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கடந்த சில தினங்களுக்கு முன்பாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் சாந்தமூர்த்தி,  உதவி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலையில் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நிதி நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழு முகவர்கள், பைனான்ஸ் உரிமையாளர்கள்,மற்றும் நுண் கடன் நிறுவனங்களின் அதிகாரிகளை வரவழைத்து,  அவர்களுக்கு  கலெக்டரின் அறிவிப்பினை எடுத்து விளக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை பொதுமக்களிடம் கடனை கட்டச்சொல்லி நிர்பந்தம் செய்யக்கூடாது, ஊரடங்கு காலத்தில் வார வட்டி, மீட்டர் வட்டி, கந்து வட்டி உள்ளிட்ட அநியாய வட்டி வசூலிக்க கூடாது. கடனை வசூலிக்கும்போது மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும். மேலும் கலெக்டரின் உத்தரவை மீறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்பட நேரிடும் என, அங்கு இருந்தவர்களுக்கு காவல் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

Tags:    

Similar News