தூய்மைக்கான மக்கள் இயக்கம்: மரக்கன்று நடவு செய்த நகராட்சி தலைவர்
குமாரபாளையத்தில் நகராட்சி தலைவர் மரக்கன்றுகள் நடவு செய்து திட்டத்தை தொடக்கி வைத்தார்;
குமாரபாளையத்தில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் மரக்கன்றுகள் நடவு செய்து திட்டத்தை தொடக்கி வைத்தார்
குமாரபாளையத்தில் நடந்த நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை நகராட்சி தலைவர் மரக்கன்றுகள் நடவு செய்து தொடக்கி வைத்தார்.
குமாரபாளையம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் துவக்கப்பட்டு எனது குப்பை எனது பொறுப்பு, என்ற அடிப்படையில், நகரப் பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 33 வார்டுகளிலும், தினசரி வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து, உரக்கிடங்கு மூலம் உரங்கள் தயாரித்து விவசாயத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தூய்மை பணியாளர்கள் மூலம் அனைத்து வார்டுகளிலும் சாக்கடை சுத்தம் செய்தல், புல் பூண்டு அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி ஆணையாளர் சரவணன் தலைமையில் காவிரிக் கரையோரம் மரக்கன்றுகளை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் நடவு செய்தார்.
பொது இடங்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளான ஆற்றங்கரை, கோம்பு பள்ள ஓடை ஆகியவற்றில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டக் கூடாது, எனவும், வீடுகள் தோறும் வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று தரம் பிரித்து வழங்க வேண்டும் எனவும், குமாரபாளையம் நகராட்சியை தூய்மையான நகராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் பெரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் நகராட்சித்தலைவர் கேட்டுக் கொண்டார். சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் ஜான் ராஜா, கவுன்சிலர் ராஜ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.