குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளர் முருகேசன் தலைமை வகித்து பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் உயர்த்தப்படவில்லை. விலைவாசி உயர்ந்துள்ளதால் இவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் 40 சதவீத ஊனத்திற்கு அதிகபட்சம் 3 ஆயிரத்து 800 ரூபாயும், தெலுங்கானாவில் 3 ஆயிரத்து 016 ரூபாயும் வழங்கி வருகிறார்கள். அதே போல் தமிழகத்தில் 3 ஆயிரமும், கடும் ஊனமுற்றவர்களுக்கு 5 ஆயிரமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. நகர தலைவர் பராசக்தி, நகர துணை தலைவர் ஆறுமுகம், மாவட்ட குழு உறுப்பினர்கள் சசிகலா, செல்வராணி, லலிதா, சின்னராசு, நடேசன், நிர்வாகிகள் அனந்தன், ஆனந்தகுமார், மோகன், சண்முகம் உள்பட மாற்றுத்திறனாளிகள் பலர் பங்கேற்றனர்.
இந்த போராட்டம் நேற்று காலை 10:00 மணிக்கு தொடங்கி மாலை 06:00 மணி வரை நீடித்தது.