மேம்பாலம் பணியால் போக்குவரத்து இடையூறு: பழைய நெடுஞ்சாலை திறப்பு
குமாரபாளையம் அருகே மேம்பாலம் பணியால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறைச் சமாளிக்க பழைய நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.;
குமாரபாளையம் அருகே மேம்பாலம் பணி போக்குவரத்து இடையூறு சமாளிக்க பழைய நெடுஞ்சாலையை தி.மு.க. ஒன்றிய செயலர் நாச்சிமுத்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
குமாரபாளையம் அருகே மேம்பாலம் பணியால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து இடையூறுகளைச் சமாளிக்க பழைய நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக வாகன போக்குவரத்து சர்வீஸ் சாலைகளில் திருப்பி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவியர் மிகவும் அவதிக்குள்ளா நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் அதே பகுதியில் பழைய நெடுஞ்சாலை பயன்பாடற்று புதர்மண்டி கிடந்தது. அதனை சரி செய்து மக்கள் பயன்படும் வகையில் சமூக ஆர்வலர்களால் புனரமைக்கப்பட்டது. இந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விழா தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா தலைமையில் நடந்தது.
தி.மு.க. ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து பங்கேற்று ரிப்பன் வெட்டி, இந்த பாதையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். வார்டு உறுப்பினர் முனியப்பன், விஜயநகர் காலனி, சுபாஷ் நகர் பொதுமக்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.
இந்த பாதை திறப்பு குறித்து தட்டான் குட்டை, வேமன்காட்டுவலசு, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
பொதுமக்கள் இந்த சாலை வழியாகத்தான், கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் நிறைய உள்ளதால், மாணவ, மாணவியர் இந்த சாலையை கடந்து செல்லும் அத்தியாவசியம் ஏற்பட்டு வருகிறது. குமாரபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.
இந்த சாலை வழியாக அதிக வாகனங்கள் சென்று கொண்டுள்ளன. ஒருமுறை பொதுமக்கள் சாலையை கடக்க காத்திருந்தால் பாதி தூரம் கடக்க சுமார் 15 நிமிடமும், பாதி தூரத்தில் இருந்து மறுபக்கம் செல்வதானால் மேலும் 10 அல்லது 15 நிமிடங்கள் ஆகின்றது. இதனால் கால விரயம், எரிபொருள் விரயம் ஏற்படுகிறது.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில் போதிய போலீஸாரை நியமித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், இந்த இடத்தின் அத்தியாவசியம் கருதி உடனே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் பணிகள் நடந்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.