குமாரபாளையம் அரசு பள்ளியில் தரமற்ற சத்துணவு: மாணவர்கள் புகார்
சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் தரமற்ற சத்துணவு வழங்குவதாக மாணவர்கள் புகார்.;
குமாரபாளையத்தில் தரமற்ற சத்துணவு வழங்குவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தரமற்ற சத்துணவு வழங்குவதாக மாணவர்கள் கவுன்சிலர் வேல்முருகனிடம் புகார் தெரிவித்தனர். கவுன்சிலர் வேல்முருகன் பள்ளிக்கு சென்று சத்துணவு சமைக்கும் பணியாளர்களிடம் இது பற்றி கேட்டு, பட்டியலில் உள்ளபடி சமைப்பது, சுவையாக சமைப்பது இல்லை என்பது தெரியவந்தது. தினமும் பட்டியலில் உள்ளபடி, சமைக்கவும், சுவையாக சமைக்கவும் அறிவுறுத்தினார்.
இது பற்றி கவுன்சிலர் வேல்முருகன் கூறியதாவது:- சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தரமற்ற சத்துணவு வழங்குவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். நானே சாப்பிட்டும் பார்த்தேன். அதில் ஒரு சுவையும் இல்லை. மாணவர்கள் எப்படி சாப்பிடுவார்கள். இங்கு சாப்பிடுவதே வசதி இல்லாத மாணவ, மாணவியர்தான். பள்ளியிலாவது சுவையான சாப்பாடு சாப்பிடட்டும் என்றுதான், அரசு சார்பில் சத்துணவு வழங்கப்படுகிறது. இதனை அலட்சியமாக எண்ணி, சுவையில்லாத, சுகாதாரமற்ற முறையில் சத்துணவு சமைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளும் இதனை கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.