குமாரபாளையத்தில் என்.சி.சி. மாணவர்களுக்கான இலவச கண், பல் சிகிச்சை முகாம்
குமாரபாளையத்தில் என்.சி.சி. பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு இலவச பல் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
ஈரோடு 15வது என்.சி.சி. பட்டாலியன் சார்பில் நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டு தோறும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பயிற்சி ஜூலை 11ல் முதல் ஈரோடு கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் துவங்கியது.
இதில் பங்கேற்பதற்காக குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜே.கே.கே. ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பர்கூர் மலைவாழ் உண்டு உறைவிட பள்ளி மாணவ, மாணவியர் 60 பேர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
கமாண்டிங் அலுவலர் அணில்வர்மா, நிர்வாக அலுவலர் கிருஷ்ண மூர்த்தி உத்திரவின் பேரில், சுபேதார் மேஜர் செந்தில்குமார், கம்பெனி ஹவில்தார் மேஜர் அப்துல் காதர், என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட என்.சி.சி. அலுவலர்கள் பயிற்சி கொடுத்தனர்.
இது பற்றி குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி கூறுகையில், இந்த பயிற்சியில் துப்பாக்கி சுடுதல், துப்பாக்கி பார்ட்ஸ் எல்லாம் கழட்டி மீண்டும் பூட்டுதல், ஓட்டம், உயரம் தாண்டுதல், தடகள ஓட்டம், மலை ஏறுதல், உள்ளிட்ட பல பயிற்சிகளும், மன அமைதிக்கு பாட்டு, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த முகாமில் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா பல் மருத்துவ கல்லூரி சார்பில் பல் சிகிச்சை முகாம், ஈரோடு ஐ பவுண்டேசன் சார்பில் கண் குறைபாடு கண்டறிதல் முகாம் நடத்தப்பட்டது.