குமாரபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.;

Update: 2023-02-28 11:30 GMT

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமை வகித்தார். ஒவ்வொரு வருடமும் சர் சி வி ராமனின் ராமன் விளைவு என்ற கண்டுபிடிப்பு சமர்ப்பிக்கப்பட்ட தினத்தையே நாம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடுகிறோம்.

இவரின் வாழ்க்கை வரலாறு, கண்டுபிடிப்புகள், சாதனைகள் பற்றியும், மாணவர்களுக்கு அறிவியல் தாக்கத்தை பற்றியும், கணித வளர்ச்சிக்கு அறிவியலும் எவ்வாறு தொடர்புடையது என்பதை பற்றியும் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பள்ளிபாளையம் வட்டார அளவிலான வானவில் மன்ற கருத்தாளர் குணசேகர் பங்கேற்று, உலகளாவிய நல்வாழ்வுக்கான அறிவியல் எனும் தலைப்பில், மாணவர்களிடையே அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றியும், செயற்கைக்கோள் மாதிரிகள், ராக்கெட் வடிவமைப்பு மற்றும் மழைநீர் மறுசுழற்சி, உயர் அழுத்த மின்சாரம் பற்றிய சோதனைகளும் மற்றும் தானியங்கி நீர் நிலையை கண்டுபிடிக்கும் கருவி ஆகியவற்றை மாணவர்கள் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்தார்.

இதில் மாணவர்களின் சிறப்பான படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியை ஆசிரியர் கவிராஜ், அந்தோணிசாமி ஆகியோர் ஏற்பாடு செய்தார்கள். அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கள் குமார், சுதா, தமிழ்ச்செல்வி, விஜயா, கலைவாணி, சுசீலா, சுமதி, கலைச்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.

சர் சி.வி. ராமன் குறித்து ஆசிரியர் அந்தோணிசாமி கூறுகையில், சந்திரசேகர வெங்கட ராமன் பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.

சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஓர் அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.

சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா. சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். இவர் 1904ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய இளங்கலைப் பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் முடித்தார். வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை மாநிலக் கல்லூரியிலே தொடர்ந்தார். 1907ஆம் ஆண்டு ஜனவரியில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதிலிடம் பெற்றார். 1907ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார்.

ச. வெ. இராமன் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார். இவர் நவம்பர் 21, 1970ல் இவ்வுலகில் இருந்து பிரிந்தார்.

சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.

இந்திய இயற்பியல் ஆய்விதழில் இவர் ‘வெ’ப்ருவரி 28, 1928 ல் ஒரு புதிய ஒளிர்ப்பாடு என்னும் தலைப்பில் தம் ஆய்வுக்கண்டுபிடிப்புகளின் கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணனுடன் சேர்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டார். இப்புது அறிவியல் ஒளி விளைவுதான் இவருக்கு நோபல் பரிசு பெறவும் தன் பெயரால் ஒரு அறிவியல் விளைவு பெயர் பெறவும் வழி வகுத்தது. இவர் இந்திய ஆய்விதழில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வயலின், மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார். பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News