முருகர் கோவில் கும்பாபிஷேக விழா!
குமாரபாளையத்தில் முருகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
குமாரபாளையத்தில் முருகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
குமாரபாளையம், ராஜாஜி குப்பம், வலம்புரி விநாயகர், அறுபடைவீடு பாலசெல்வகுமரன் ஆலயங்கள் கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் காலை முகூர்த்தகால் நடுதலுடன் துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 05:00 மணியளவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இதனையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கும்பாபிஷேக விழா குறித்து ஆன்மீக அன்பர்கள் கூறியதாவது:
இறைவனுக்கு கோயில் கட்டி வழிபடுவது வழக்கம். புதிதாக ஓர் ஆலயம் எழுப்பப்படும்போது, விக்கிரகங்களை ஆலயத்தினுள் பிரதிஷ்டை செய்வதோடு மட்டும் ஆலயம் முழுமை பெற்றுவிடுமா என்றால், நிச்சயமாக இல்லை. அது எப்போது முழுமை பெறும்? ஆலயத்தில், 'கும்பாபிஷேகம்' நடந்த பின்னர்தான் அது வழிபாட்டுக்கு உரிய ஸ்தலமாக முழுமை பெறுகிறது.
கும்பம் என்றால் 'நிறைத்தல்' என்று பொருள். நம் ஆலயங்களில் வீற்றிருக்கும் விக்கிரகங்களுக்கு, அபிஷேகங்கள் மூலம் இறைசக்தியை நிறைத்தலே கும்பாபிஷேகம். இதனை சைவர்கள் 'மகா கும்பாபிஷேகம்' என்றும் வைணவர்கள் 'மகா சம்ப்ரோக்ஷணம்' என்றும் அழைக்கிறார்கள்.
மேலும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் மூலம் யாகங்கள் செய்யப்பட்ட தீர்த்தங்களால் இறைவன் மீதும், கோபுரக் கலசங்கள் மீதும் புனித தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. கும்பாபிஷேகம் மூலமாகவே விக்கிரகங்கள் தெய்வசக்தியைப் பெறுகின்றன.
பெரும்பாலும், கும்பாபிஷேகமானது 12 வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. இதன் காரணம், நாம் கும்பாபிஷேகம் செய்யும் போது சாத்தப்பட்ட அஷ்டபந்தனமானது (மருந்து) 12 வருடங்கள் வரைதான் சக்தியோடு இருக்கும். மேலும் கோயில்களில் ஏதேனும் புனரமைப்பு செய்தாலும் கும்பாபிஷேகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.