குமாரபாளையம் காவிரி வெள்ளத்தை பார்வையிட்ட எம்.பி., மாவட்ட கலெக்டர்

குமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளை எம்.பி. மற்றும் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டனர்.

Update: 2022-08-28 10:15 GMT

குமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளை எம்.பி. ராஜேஷ்குமார் மற்றும் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டனர்.

கர்நாடக நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக காவிரியில் நீர் வரத்து அதிகரித்தது. மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி கரையோர பகுதியான மணிமேகலை தெரு, இந்திரா நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதியில் காவிரி கரையில் குடியிருக்கும் பொதுமக்கள் நகராட்சிக்கு சொந்தமான நடராஜா திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் எம்.பி. ராஜேஷ்குமார், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், ஆகியோர் நேரில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு, பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கபட்டுள்ள பொதுமக்களுக்கு அறுதல் கூறினார்.

இதுகுறித்து எம்.பி. ராஜேஷ்குமார் கூறுகையில், குமாரபாளையம் பகுதியில் காவிரி கரையோர பகுதியில் குடியிருக்கும் 35 குடும்பத்தினரை சேர்ந்த 77 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்ட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு, மருத்துவ பரிசோதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீர் வரத்து அதிகமானாலும் பதிக்கப்படும் நபர்களை தங்க வைத்து பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளை செய்துள்ளது.

திருச்செங்கோடு பகுதியில் மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட நிர்வாகம் மண்டபத்தில் தங்க வைக்க, தி.மு.க. மாவட்ட செயலர் மூர்த்தி உணவு வழங்கியுள்ளார். மழை நீர் வடிகாலில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 520 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. கரையோரத்தில் வாழ்ந்து வரும் நபர்களின் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் பரிசீலனை செய்து வீடுகள் ஒதுக்கீடு செய்வார். சட்டத்திற்கு புறம்பாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்புதான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட தி.மு.க. செயலர் மூர்த்தி, ஆர்.டி.ஓ. இளவரசி, நகர தி.மு.க. செயலர் செல்வம், தாசில்தார் தமிழரசி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஓ-க்கள் முருகன், ஜனார்த்தனன், செந்தில்குமார், தியாகராஜன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News