எம்.ஜி.ஆருக்கே அறிமுகம் இல்லாத இடைசெருகல்.. கட்சியை கைப்பற்ற துடிக்கிறது: நாஞ்சில் சம்பத்
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்றது.;
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் குமாரபாளையத்தில் மாவட்ட செயலர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற நாஞ்சில் சம்பத் பேசுகையில், பெரியாரிடம் அண்ணா, சேர்ந்தது, அண்ணாவிடம் கருணாநிதி சேர்ந்தது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது, முதன்முதலாக அண்ணா பாராளுமன்றத்தில் அனைவரும் அதிசயிக்கும் வகையில் ஆங்கிலத்தில் பேசியது, ஸ்டாலின் உத்திரவு படி கீழடியில் அகழ்வாராய்ச்சியை ஊக்குவித்தது, தேவதாசி முறையை ஒழித்தது, உள்ளிட்ட பல தி.மு.க. சாதனைகள் குறித்தும், வரலாறு குறித்தும் பேசினார்.
தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதாக கூறி, ஆர்.எஸ்.எஸ்.க்கு அடியாட்கள் சேர்க்கும் வேலை இந்த வேலை. 17 வயதில் படித்து முடித்து விட்டு ஓர் மாணவன் உயர்கல்வி பெற முடியாமல் காலாண்டு காலம் ராணுவத்தில் சேவை ஆற்றி விட்டு அதில் 10 சதவீதம் பேரை மட்டும் ராணுவம் தக்க வைத்து கொள்ளும். மீதியுள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றால், வெளியேறுகிறவர்கள் எங்கே போவார்கள்? இந்த செயலை கூச்சமில்லாமல் செய்திருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் பற்றி பாஜக செய்தி தொடர்பாளர்கள் தவறுதலாக சித்தரித்ததன் விளைவு இந்தியாவின் அமைதி இன்று கேள்விக்குறியாகி இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்களை இன்று அழுத்தி கொல்லுகிற மோடி அரசு 2024ல் மீண்டும் ஆட்சிக்கு வர மக்களை திசை திருப்புகிறார். எதிர்கட்சிகளை திட்டமிட்டு பழி வாங்குகிறார். மராட்டிய மண்டலத்தில் மாலிக் என்கிற அமைச்சர் பொய் வழக்கு புனையப்பட்டு சிறையில் இருக்கிறார்.
டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சரை கைது செய்து சிறையில் வைத்து விட்டு அவரது வீட்டில் ரைடு நடைபெறுகிறது. இளைஞர்கள் கடைசி கட்டத்தில் ராணுவதிலாவது சேரலாம் என்றால் அதற்கும் வழி இல்லாமல் போனது. எதிர்கட்சிகள் மோடியை வீட்டுக்கு அனுப்ப ஆயத்தமாகி வருகையில் அனைவரையும் திசை திருப்ப அக்னி பாத் -ஐ கையில் எடுத்திருக்கிறார்கள். இந்த அக்னி இவர்களை சுட்டு பொசுக்கும்.ராணுவத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன் ஒற்றை தலைமையா? அதெல்லாம் கிடையாது என்று வித்தாரம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தனதுஅடியாட்களை அஜண்டா இல்லாமல் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் பேச வைத்து, ஒற்றை தலைமை என்று எடப்பாடி பழனிச்சாமி அத்துமீறுகிறார். எம்.ஜி.ஆருக்கே அறிமுகம் இல்லாத ஒரு இடைசெருகல் அந்த கட்சியை கைப்பற்ற துடிக்கிறது. அந்த கட்சிக்குள் பூகம்பம் வெடித்து இருக்கிறது. கட்சியின் அதிகார பூர்வமான ஒருங்கிணைப்பாளரை கட்சியை விட்டு நீக்குகிற நடவடிக்கைக்கு ஆயத்தமாகி வருகிறார் என்றால் இந்த செயலுக்கு பின்னால் பி.ஜே.பி. தான் உள்ளது என குற்றம் சாட்டுகிறேன்.
வலிமை வாய்ந்த கட்சியை உருக்குலைத்து, அந்த இடத்தில் உட்கார்ந்து கொள்ள பாஜகவின் நரித்தனத்திற்கு இன்று பழனிசாமி பலியாகி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு சாப விமோசனமே கிடையாது. கட்சியின் சீனியர் செங்கோட்டையன் தான். அவர்தான் தலைவர் ஆகணும். கட்சி உடையாமல் இருக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். அவர்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நகர தி.மு.க. செயலர் செல்வம், ஒன்றிய செயலர் யுவராஜ், நிர்வாகிகள் மாணிக்கம், ஜெகநாதன், பவானி நகர செயலர் நாகராஜன், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் சத்தியசீலன், ரங்கநாதன், அன்பழகன், ரவி, ராஜ்குமார், உள்ளிட்ட மகளிரணி, இளைஞரணி நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.