ஊரடங்கு அறிவிப்பால் தவிக்கும் விசைத்தறி தொழிலாளர் குடும்பங்கள்
பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்கள் ஊரடங்கு அறிவிப்பால் வேலையின்றி வருமானத்துக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று 2ம் அலை மிக வேகமாக பரவி வருவதால் அதை தடுக்கும் முயற்சியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் அதிகாலை 4.00 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். அதே நேரத்தில் விசைத்தறிகள் இயக்கக் கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் பள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வந்த ஏராளமான விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு இரண்டு வாரங்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த காலங்களில் முழு ஊரடங்கால் விசைத்தறி தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டு தற்போது சீரடைந்து வந்த நிலையில் மீண்டும் தறி பட்டறைகளுக்கு இரண்டு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளதால் விசைத்தறி கூலி தொழிலாளர்கள் வருமானத்துக்கு வழியின்றி விழி பிதுங்கி உள்ளனர்.
மேலும் வர்த்தக வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் வேறு வேலை வாய்ப்பு இன்றி வருமானமின்றி வறுமையில் தவித்து வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு ஏதேனும் நிவாரணத் தொகை அல்லது ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என விசைத்தறி தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.