குமாரபாளையம் அருகே கிராம சபா கூட்டங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பு
குமாரபாளையம் அருகே கிராமசபா கூட்டங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் ஊராட்சி தலைவி புஷ்பா தலைமையில் கிராமசபா கூட்டம் நடந்தது. அதே போல் குப்பாண்டபாளையம் ஊராட்சி தலைவி கவிதா தலைமையில் கிராம சபா கூட்டம் நடந்தது. இரு கூட்டங்களில் வரவு, செலவு கணக்குகள் சமர்பிக்கப்பட்டன. அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். ஊராட்சி பகுதிகளில் இனி நடக்கவிருக்கும் பணிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன.
கிராம சபா கூட்டம் குறித்து முன்னாள் ஊராட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.
இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டதின் நோக்கமாகும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும்.
கிராம சபைக் கூட்டத்தில், தங்கள் கிராமங்களில் அரசு மதுக்கடைகள் நடத்துவதை தடை செய்து தீர்மானம் இயற்றினால், அக்கிராமங்களில் அரசு மதுக்கடைக்களை திறக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.