மொழிப்போர் தியாகிக்கு நினைவேந்தல் கூட்டம்

குமாரபாளையத்தில் மொழிப்போர் தியாகிக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-03-12 16:30 GMT

குமாரபாளையத்தில் மொழிப்போர் தியாகிக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் மொழிப்போர் தியாகிக்குநினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

மொழிப்போர் தியாகி சாமி, சில நாட்கள் முன்பு இறந்தார். இவரது மறைவுக்கு மொழிப்போர் தியாகிகள் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் குமாரபாளையம் மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் அருகே நடைபெற்றது. இதில் தியாகி பவானி வடிவேல் தலைமை வகித்தார். சாமியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பவானியை சேர்ந்த 14 நகரமன்ற உறுப்பினர்கள், குமாரபாளையம் சங்க நிர்வாகிகள் அன்பழகன், ரவி, பாண்டியன், விடியல் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற அனைவரும் சாமியின் மொழிப்போர் செயல்பாடுகள் குறித்தும், மொழிக்காக அவர் பட்ட துன்பங்கள் பற்றியும் நினைவு படுத்தி பேசினார்கள்.

மொழிப்போர் குறித்து மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு ஒன்றை எழுத வேண்டுமானால் 1937-ல் தொடங்கி எல்லாப் போராட்டங்களையும் முறைப்படி வரிசைப்படுத்துவதோடு அவற்றில் காலந்தோறும் ஏற்பட்டுவந்த மாற்றங்கள், புதிய போக்குகள், விளைவுகள் என்றெல்லாம் வெவ்வேறு கோணங்களில் தொகுக்க இடமிருக்கிறது. ஆனால், அவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வரைமுறைப்படுத்தப்பட்ட முழுத் தகவல்களைக் கொண்ட வரலாற்று நூல் ஏதும் நம்மிடம் இல்லை. 

தாளமுத்து, நடராசன் என்கிற பெயர் வரிசையை மொழிப்போர்த் தியாகிகள் என்று வழமையாகக் கூறுவதுண்டு. இப்பெயர் சென்னையில் இருக்கும் அரசுக் கட்டடம் ஒன்றுக்கும் சூட்டப்பட்டுள்ளது. இந்த வகையில் இப்பெயர்களும் பெயர் வரிசையும் அதிகாரபூர்வ அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றன. அதே வேளையில், இப்பெயர் பற்றிய குழப்பங்களும் நிலவுகின்றன. இரண்டையும் ஒரே பெயரென்று கருதுவோரும் உள்ளார்கள். இரண்டும் தனித்தனிப் பெயர்கள் என்று அறிந்தவர்கள் தாளமுத்து முதலில் இறந்தவரென்றும் நடராசன் அடுத்து இறந்தவர் என்றும் கருதுகிறார்கள். ஆனால், முதலில் இறந்தவர் நடராசன். அடுத்து இறந்தவர் தாளமுத்து. எனவே, இந்த வரிசை நடராசன், தாளமுத்து என்றே இருக்க வேண்டும். ஆனால், மேற்கண்ட பெயர் வரிசை முன்பின்னாக மாறி அதுவே வரலாறாக நிலைத்துவிட்டது.

1965-ம் ஆண்டின் மொழிப் போராட்டம் திமுக ஆட்சிக்கு வர முதன்மைக் காரணமாய் விளங்கியது என்றால், பிரசாரச் செயல்முறையில் வளர்ந்துவந்த பெரியாரின் சுயமரியாதை இயக்கம் அதுவரை பேசிவந்த பார்ப்பனர் எதிர்ப்புக் கருத்தியலைப் பலரும் ஏற்பதற்கான நியாயத்தையும் அதற்கான வெகு மக்கள் திரட்சியையும் சாத்தியப்படுத்த 1937-ல் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நடந்த மொழிப் போராட்டம் உதவியது. தமிழ் உணர்ச்சிபூர்வமான விஷயமாக மாற்றப்பட்டதும், அதன் பேரில் உணர்வுபூர்வமாக வெகுமக்கள் ஈர்க்கப்பட்டதும் இக்காலத்தில் நடந்தேறின. போராட்டம், அதற்கான உணர்ச்சி என்பதெல்லாம் வெகுமக்களை நோக்கியதாகவே எப்போதும் இருந்துவருகின்றன. இதன் அடிப்படையில், அடித்தட்டு மக்கள்தான் பெருமளவு பங்களிக்கிறார்கள் என்பது சமூக வரலாறு.

1937-ம் ஆண்டு முதல் தமிழகமெங்கும் தமிழறிஞர்களால் கருத்தியல் அளவில் பரப்பப்பட்டுவந்த இந்தி எதிர்ப்பு, மக்கள் பங்கேற்கும் போராட்டமாக மாறியபோது சென்னைதான் அதன் மையமானது. சென்னையிலேயே அதிக அளவிலான போராட்டங்கள் நடந்தன. இதில் பங்கேற்ற வெகுமக்கள் திரட்சி என்கிற அளவில் சென்னைவாழ் அடித்தள மக்களுக்குக் கணிசமான பங்கு இருந்தது. ஒடுக்கப்பட்டோர் தலைவர்களும் போராட்டத் தலைமையில் இடம்பெற்றிருந்தார்கள்

05.12.1938 அன்று சென்னை சௌகார்பேட்டையில் இருந்த இந்து தியாலஜிகல் உயர்நிலைப் பள்ளி முன்பு இந்தித் திணிப்புக்கு எதிராக நடந்த மறியலில் ஈடுபட்ட பலரில் ஒருவராக நடராசனும் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட மற்றவர்களைப் போல் இவருக்கும் ஏழரை மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்தபோது ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக டிசம்பர் 30 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உடல் நிலை மோசமாகி, தண்டனைக் கைதியாகவே 1939, ஜனவரி 15-ல் காலமானார்.

மொழிக்கான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுக் கைதியாக இருந்தபோதே ஒருவர் இறந்தது அதுதான் முதன்முறை. அந்த வகையில் மொழிப் போராட்டத்தின் முதல் தியாகி நடராசன்தான். நடராசனின் மரணம் சூழலை உணர்ச்சி பூர்வமாக்கி விட்டது. போராட்டத்தை மேலெடுத்துச் செல்ல இம்மரணம் அடிக்கல்லானது. இதே போன்று போராட்டத்தில் கைது செய்யப்பட்டு வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தாளமுத்து, 11.03.1939-ம் நாளில் இரண்டாவதாக மரணமடைந்தார்.1937-ம் ஆண்டில்  முதல் மொழிப் போராட்டம் தொடங்கியது.. தமிழ் அடையாளம் மொழிப் பிரச்சினையாக மட்டுமே சுருங்கிப்போய்விட்ட இன்றைய நிலையில், கடந்த கால வரலாற்றுத் தருணங்களை இன்றைக்கு நினைவுகூர்வது தமிழ் அடையாளத்தை ஜனநாயகப்படுத்த உதவும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Tags:    

Similar News