தங்கமணி எம்எல்ஏ திறந்து வைத்த ரேசன் கடையில் பொருட்கள் வழங்கல்
குமாரபாளையத்தில், எம்.எல்.ஏ. தங்கமணி திறந்து வைத்த ரேசன் கடையில், தி.மு.க. நகர பொறுப்பாளர் பொருட்கள் வழங்கினார்.
குமாரபாளையம் கம்பன் நகர் பகுதியில், ரூ. 12.85 லட்சம் மதிப்பில், தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை கட்டப்பட்டது. இதை, முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணி, கடந்த செப். 28ல் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய எம்.எல்.ஏ. தங்கமணி, இந்த ரேசன் கடை கட்டிடம் திறந்து வைக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவில்லை. எனவே நாங்களே இதனை திறந்து வைத்துள்ளோம். இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட குமாரபாளையம் தொகுதியில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக இருக்கிறேன். இதேநிலை தொடருமானால் சட்டமன்றத்தில் இதுபற்றி பேசி, நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் ஒருநாள், இங்கு வந்து ரேசன் பொருட்கள் வழங்குவேன் என்றார்.
இதனிடையே, தங்கமணி எம்.எல்.ஏ திறந்து வைத்த ரேஷன் கடை, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. குமாரபாளையம் தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம், இந்த ரேசன் கடையில் பொதுமக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கி, இப்பணியை துவக்கி வைத்தார்.