வட மாநில தொழிலாளர்களின் அச்சம் போக்க ஹோலி இனிப்புகள் வழங்கிய போலீசார்

வட மாநில தொழிலாளர்களின் அச்சம் போக்க ஹோலி இனிப்புகளை குமாரபாளையம் போலீசார் வழங்கினார்கள்;

Update: 2023-03-08 15:00 GMT

வட மாநில தொழிலாளர்களின் அச்சம் போக்க ஹோலி இனிப்புகளை  வழங்கிய குமாரபாளையம் போலீசார்

வட மாநில தொழிலாளர்களின் அச்சம் போக்க ஹோலி பண்டிகைக்கான  இனிப்புகளை குமாரபாளையம் போலீசார் வழங்கினார்கள்.

தமிழகத்தில் தற்போது மிக தீவிரமாக பரவி வரும் வதந்தி, வட மாநில தொழிலாளர்களை, அவர்கள் மாநிலத்திற்கு திரும்பி போகச் சொல்லி தாக்கப்பட்டு வருகிறார்கள் என்பதுதான். போலீஸ் உயர் அதிகாரிகள் உத்திரவின்படி, இது போலியான செய்தி என மாநிலம் முழுதும் போலீசார், வட மாநில தொழிலாளர்களுக்கு புரிய வைத்து வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் போலீசார், இங்குள்ள சில தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்களுடன் ஹோலி திருவிழா கொண்டாடி, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அச்சத்தை போக்கும் வகையில் அறிவுரையும் கூறினார்கள். இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. சந்தியா உள்பட போலீசார் பலர் பங்கேற்றனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக போலி வீடியோவை பரப்பி வதந்தி கிளப்பிய நபர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஒரு வீடியோவை எடிட் செய்து மர்மநபர்கள் சமூகவலைதளத்தில் பரப்பினர். இந்த வீடியோ தமிழகத்திலும் வைரலானது. இதையடுத்து தமிழகத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களின் உறவினர்கள் தங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு தமிழகத்தை விட்டு வந்துவிடுமாறு அழைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை. இது வதந்தி, இதை நம்ப வேண்டாம் என காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டனர்.

வேறு சில சம்பவங்களின் வீடியோ காட்சிகளை தவறாக இணைத்து பொய்யான தகவல் பரவியதால் வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. பீகார் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வீடியோ வெளியானதால் பீகார் சட்டசபையில் இது ஒலித்தது. மேலும் பீகார் அனைத்து கட்சி குழுவினர் தமிழகம் வந்து பார்த்துவிட்டு அது போல் எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்துவிட்டனர்.

இந்த நிலையில் திடீரென வடமாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கிறார்கள். இதையும் விஷமிகள் சிலர், தமிழகத்தில் இருக்க பயந்து கொண்டு அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு புறப்படுகிறார்கள் என புரளியை கிளப்பி விட்டனர். இதையடுத்து வடமாநில தொழிலாளர்களிடம் விசாரித்த போதுதான் அவர்கள் தமிழகத்தில் தாக்குதல் நடந்தது போன்று போலியாக சித்தரித்த வீடியோவை கண்டு அவர்கள் போகவில்லை என்றும் ஹோலி பண்டிகை கொண்டாடவே சொந்த ஊர்களுக்கு படையெடுக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.

இதனிடையே போலியாக வதந்தி பரப்பியவர்களை தேடி தமிழகத்தில் இருந்து தனிப்படை போலீஸ் பீகார், டெல்லிக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவது குறித்து போலி வீடியோ பரப்பியதாக பீகாரின் ஜமுன் மாவட்டத்தைச் சேர்ந்த அமன் குமாரை பீகார் தமிழக போலீஸார் கைது செய்தனர். இதை பீகார் கூடுதல் டிஜிபி ஜிதேந்திர சிங் கங்குவார் உறுதி செய்தார். புரளியை கிளப்பினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். அது போல் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவும் வடமாநிலத்தவர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Tags:    

Similar News