குமாரபாளையத்தில் கால பைரவர் சிறப்பு வழிபாடு
குமாரபாளையத்தில் கால பைரவர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி குமாரபாளையம் சிவன் கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில் சவுண்டம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில், தேவூர் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமிக்கும், காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அனைத்து சிவன் கோவில்களிலும் கால பைரவர் அல்லது பைரவர் சன்னதி நிச்சயம் அமைந்திருக்கும். வடகிழக்கு திசையில், ஆடை இல்லாமல், நின்ற கோலத்தில் காட்சி தருவார். நாகத்தை பூணூலாகவும், பிறையை தலையிலும் அணிந்து காட்சி தருவார். சிவாலயங்களில் காவல் தெய்வமாக விளங்குபவரக் பைரவர். பைரவர் என்ற சொல்லுக்கு பயத்தை போக்குபவர் என்று பொருள். மனதார நினைத்து வழிபடுபவர்களுக்கு உடனடியாக அருளை தரக் கூடியவர். இவரின் அருள் இருந்தால் அஷ்டமா சித்திகமும் கைகூடும்.
காலத்தின் கடவுள் என சொல்லப்படுவதால் ஒருவரின் தலைவிதியை மாற்றும் சக்தி இவருக்கு உண்டு. நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்த வல்லவர் என்பதால் இவரை வழிபட்டால் நவகிரக தோஷங்கள், நவகிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து மீண்டு வர முடியும். இவர் சனீஸ்வரரின் குரு ஆவார்.
சிவ பெருமானின் மிகவும் சக்தி வாய்ந்த ருத்ர வடிவங்களில் ஒன்று கால பைரவர். இவர் காலத்தை கட்டுப்படுத்தும் வல்லமை படைத்தவர் ஆவார். கருப்பான, உக்கிரமான தோற்றம் கொண்ட கால பைரவரின் வாகனமாக நாய் உள்ளது. நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் உடுக்கை, கயிறு, திரிசூலம், மண்டை ஓடும் ஆகியவற்றை வைத்தபடி காட்சி தருகிறார். கால பைரவர், தீய சக்திகள் மற்றும் செய்வினை பில்லி சூனியம் ஆகியவற்றை அகற்ற வல்லவர். கால பைரவரை வழிபடுபவர்கள் தீய சக்திகளின் பிடியில் இருந்து விடுபடுவார்கள். காலாஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, பைரவாஷ்டமி வரும் நாட்களில் கால பைரவரை வழிபடுவது சிறப்பானது.
கால பைரவரை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேய்பிறை அஷ்டமி திதி ஆகியவை ஆகும். இந்த நாளில் கால பைரவர் கோவில் அல்லது சிவன் கோவில்களில் உள்ள பைரவர் அல்லது கால பைரவர் சன்னதிக்கு சென்று வழிபட பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
கால பைரவருக்கு செளமுக விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் உகந்ததாகும். செளமுக விளக்கு என்பது நான்கு புறமும் தீபம் கொண்ட விளக்காகும். இதில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். மிளகு சேர்த்த உளுந்த வடை, தயிர் சாதம் ஆகியவற்றை கால பைரவருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.