பள்ளிப்பாளையத்தில் பொதுஇடங்களில் மது குடிப்பதை தடுக்க சமூக நல ஆர்வலர்கள் நூதன முயற்சி
காவிரி ஆற்றங்கரையோரம் சட்டவிரோதமாக மது அருந்தினால்,காவல்துறை நடவடிக்கை எடுக்கும் சுவர் விளம்பரம் செய்யபட்டுள்ளது.;
பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள பெரியார் நகர் பகுதியில், இந்த இடத்தில் மது அருந்தக்கூடாது அப்படி அருந்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என சுவர் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால், மதுக்கடைகளை திறக்க நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ,தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் மது அருந்தும் நபர்கள் பலரும் கள்ளச் சந்தையில் விற்கப்படும் மதுக்களை வாங்கி வருகின்றனர். பள்ளிபாளையம் பெரியார் நகர் பகுதி காவிரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பள்ளிபாளையம் பெரியார் நகர் பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதாலும், மக்கள் நடமாட்டம் குறைவான எண்ணிக்கையில் இருப்பதாலும் கள்ளச்சந்தையில் மது வாங்கி வரும் நபர்கள் சிலர் மாலை வேளைகளில் காவிரி ஆற்றின் கரையோரம் உட்கார்ந்து கொண்டு மது அருந்துவது,மது பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்வதுமாக தொடர்ச்சியாக செய்து வந்தனர்.
சமூகநல ஆர்வலர்கள் ஒரு சிலர் இதனை தடுக்கும் பொருட்டு பள்ளிபாளையம் காவல்துறையினருடன் இணைந்து சுவர் விளம்பரம் செய்துள்ளனர். அதில் காவிரி ஆற்றங்கரையோரம் மது அருந்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், காவல்துறை கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் சுவர் விளம்பரம் மூலமாக செய்துள்ளனர். இந்த செயல்பாடு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.